PAALAM.LK

வாழிடம்

வாழிடம்

இந்தப் புவியில் வாழும் நாட்களில் வசிக்க கூடிய இடம் வாழிடம் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் வாழிடம் அவசியமானதொன்றாகும். இது இயற்கை சார்ந்ததாகவும், மனிதனால் உருவாக்கப்பட்ட வகையிலும் பல்வேறு தன்மைகளைப் பெற்று விளங்குகின்றது. வாழிடம் சார்ந்து அரசியல், பொருளாதார, கலாச்சாரம், வணிகம், போன்ற துறைகளில் அநேக மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இதனை உணர்த்தும் வகையில் 1985 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அக்டோபர் மாதத்தின் முதற் திங்கட்கிழமையை உலக வாழ்விட தினமாக பிரகடனப்படுத்தியது. வாழ்விடம் என்ற சொல் இலத்தின் மொழியில் இருந்து வந்தாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.


புவியில் இயற்கை அமைவுகளே அதிகமாக உள்ளன. காடுகள், மலைகள், கடல், பாலைவனம், துருவபிரதேசம் என்று ஏராளமான நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. அந்த பௌதீக சூழலுக்கு ஏற்ற வகையில் இசைவாக்கம் அடைந்து வாழுகின்ற உயிரினங்கள் எண்ணிலடங்காதவை. பறவைகள், நுண்ணங்கிகள், விலங்குகள் என பல வகைப்பட்டவை. சில உயிரினங்கள் முற்றிலும் வேறுபட்ட இரண்டு வெவ்வேறு வாழிடங்களில் உயிர் பிழைக்கும் திறன் கொண்டவை. ஒரு வாழிடத்தில் வாழும் இரு வேறு உயிரினங்களும் உள்ளன. ஒரே வீட்டை வாழிடமாகக்  கொண்ட மனிதனும் செல்லப் பிராணிகளும் இதற்கு சிறந்த உதாரணமாகும். பெரும்பாலான உயிரினங்கள் தனக்குரிய வாழிடத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர் பிழைக்காது. எரிமலைகள், அந்தாட்டிக்கா பனிப்பிரதேசம் போன்றவை வாழிடமாகக் கொள்ள முடியாத இடங்களில் சிலவாகும். உலகில் உயிர்ப்பல்வகைமை கூடிய இனம் பூச்சியினமாகும். இவையே நீர், நிலம், ஆகாயம், ஆகிய எல்லா இடங்களையும் வாழிடமாகக் கொள்கின்றன. வலியது தான் உயிர் பிழைக்கும் என்பதற்கு பூச்சிகள் சிறந்த உதாரணமாகும்.


நிலத்தில் வாழும் மனிதன் உயிரினங்களில் உன்னதமானவன். இயற்கை வாழிடங்களை பாதுகாத்து பராமரிக்கவும், தனக்கான வாழிடத்தை அமைத்துக் கொள்ளவும், பிற உயிரினங்களுக்கு வாழ்விடத்தை வழங்கவும் மனிதனால் மட்டுமே முடிகிறது. வாழிடமானது உயிரினங்களால் அமைந்த உயிரற்ற இடம் ஆயினும் அதனை உயிர்ப்புள்ளதாய் மாற்றும் செயற்பாட்டில் மனிதனின் பங்கு இன்றியமையாதது.


இலை தழைகளை உடைகளாய் அணிந்து உறங்கும் இடத்தினை வாழிடமாக மாற்றிக் கொண்டவன் மனிதன். சிந்திக்கும் ஆற்றல் ஒன்று அடுத்தகட்ட நகர்வினை ஏற்படுத்தியது. தொடர்ந்து குகைகளையும், மரங்களையும் வீடாக்கினான் தனக்கான ஓய்விற்காக, குடும்பத்தின் தனிப்பட்ட தேவைக்காக என காலத்திற்கு காலம் வளர்ச்சி நிகழ்ந்தது. இன்று நாம் காணும் அடுக்கு மாடி கட்டிடங்களும், அதிக வசதியுடன் கூடிய வாழிடங்கள் அனைத்தும் மனிதனால் படைக்கப்பட்டது.


செவ்வாய்க்கு சென்று கூட அதில் வாழிடம் அமைக்க முயற்சிக்கிறான் மனிதன். நகரும் வீடுகளைக் கூட இன்று நாம் காணலாம். இன்னொரு வகையில் மக்களின் வாழிடங்கள் பொருளாதாரத்தைச் சார்ந்து காணப்படுகிறது. தங்கள் வலுவிற்கு ஏற்ற வகையில் சிறிய, பெரிய அளவிலான வீடுகளை அமைத்துக் கொள்கின்றனர். சிலர் வாழிடத்திற்கு வாடகை செலுத்துகின்றனர். வாகனத்தைக் கூட வாழிடமாக மாற்றுகின்றனர். வாழிடம் இல்லாத மனிதர்களுக்கு தெருவோரம் வாழிடமாக மாறி விடுகின்றது. நாடோடிகளுக்கு நாடு முழுவதும் வீடாகி விடுகிறது. நிம்மதியும், ஓய்வுமே வாழிடத்தில் இருந்து மனிதன் எதிர்பார்க்கும் பிரதான விடயங்களாகும்.


மனிதன் தவிர்ந்த ஏனைய உயிரினங்களின் நடத்தை கோலங்களில் அவ்வளவு எளிதில் மாற்றம் நிகழ்வதில்லை. எவ்வளவு காலம் கடந்தாலும் அவற்றின் வாழிடங்கள் ஒரே மாதிரியான இயல்புகளைக் கொண்டு விளங்குகின்றன. ஆனால் அவற்றின் வாழிடத்தின் அடிப்படையின் தனித்துவமான தன்மைகள் காணப்படுகின்றன. மனிதனது சிந்தனைக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. அதற்கு தூக்கணாங்குருவிக்கூடு  ஒரு சிறந்த உதாரணமாகும்.


தூக்கணாங்குருவி அளவில் சிறியது. தன் கூட்டை மிக நேர்த்தியாக அமைக்கிறது. பாம்பு, மரநாய், குரங்கு போன்ற பிற விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தன் கூட்டை தென்னை மரம், ஈச்ச மரம் போன்றவற்றின் நுனியில் அந்தரத்தில் அமைக்கிறது. மனிதன் வாழிடத்தை அமைக்கும் போது மூலப் பொருட்களின் உச்ச கட்ட தாங்கு திறன் பற்றி சிந்திப்பது போல இக் குருவி ஈரத்தை உறிஞ்சும் தன்மையற்ற புல்லான தர்ப்பையை(நாணல்) பயன்படுத்தி தனது கூட்டை அமைக்கிறது. இரு அறைகள், வெளிச்சத்திற்கு மின்மினிப்பூச்சிகளைப் பயன்படுத்துவது என தன் வாழிடத்தை சிறந்த முறையில் அமைத்துக்கொள்கிறது.


இவற்றில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் மிருகங்கள், பறவைகள் தங்களுக்கான வாழ்விடத்தை அமைக்கும் போது இயற்கைக்கு எதுவித தீங்கும் நிகழ்வதில்லை.  காகம் தன் கூட்டை அமைப்பதற்கு குச்சி சேகரிக்கிறது என்றால் அடுத்த முற்பது நாட்களுக்கு மழை பெய்யாது என்பது பண்டைய சூழல் கணிப்புகளில் ஒன்று. ஏனென்றால் சரியாக மழை ஆரம்பிப்பதற்கு முன்பு காகம் தன் கூட்டைக் கட்டிக் கொள்ளும். அதாவது அஃறிணை ஜீவராசிகள் வாழிடத்தை அமைக்கும் போது இயற்கையோடு ஒன்றித்து செயல்படுகின்றன.


மனிதன் முற்றிலும் இயற்கைக்கு புறம்பாக செயல் படுகிறான் என்று கூறிவிட முடியாது. அமெசன் காட்டுப் பகுதியிலும் இந்தியாவின் பல இடங்களிலும்  இன்றுவரை காட்டுவாசிகள் பெருமளவில் உள்ளனர். இவர்களும் இயற்கையை சார்ந்துதான் வாழ்கின்றனர். மேலும் மனிதன் சரணாலயங்கள், மிருகக்காட்சி சாலைகள், மீன் வளர்ப்பு, செல்லப்பிராணிகள் என்று பிற உயிரினங்களுக்கான வாழிடத்தையும் ஏற்படுத்துகின்றான்.


வாழிடம் சார்ந்து பல சவால்களும், அச்சுறுத்தல்களும் காணப்படுகின்றன. போர் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, காடுகளை அழித்தல், சனத்தொகை அதிகரிப்பு, போன்ற மனித நடத்தையில் ஏற்படும் விளைவுகள் அவற்றில் சிலவாகும். மேலும் சுனாமி, காட்டுத்தீ, மண்சரிவு, பூமியதிர்ச்சி, போன்ற இயற்கைப் பேரிடர்களும் இதில் பங்கு கொள்கின்றன.


வாழிடங்கள் பொருளாதார நன்மையைப் பெற்றுத் தருகின்றன. குறிப்பிட்ட ஒரு நாகரிகத்திற்குரிய மக்கள் வாழ்ந்தனர் என்ற வகையில் பண்டைய வாழிடங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன. தொல்பொருட் சின்னங்கள் என்றவகையில் நாட்டிற்குரிய அடையாளத்தைப் பெற்றுத் தருகின்றன. மாளிகை போன்ற கட்டிடங்களில் வெளிநாட்டவர்கள், பணம் படைத்தவர்கள் விரும்பி வசிக்கின்றனர். ஒவ்வொரு வாழிடத்தை அமைக்கும் போதும் அதற்காக ஏராளமான கட்டிட மூலப் பொருட்களைப் பயன்படுத்துவதனால் உற்பத்தி நிகழ்கிறது. வணிகமும் பெருகுகிறது.


உலகை அழகாகப் பேணும் பொறுப்பும் மனிதனுக்குரியதே. குறிப்பிட்ட ஒரு இனம் உயிருடன் வாழும் இடம் வாழிடம் என்றால் எல்லா இனத்திற்கும் இன்றியமையாதது இந்த புவியாகும். பாதுகாத்தலும், பராமரித்தலும் இங்கு வாழும் ஒவ்வருவரது கடமையாகும்;. எச்சரிக்கையுடன் செயற்படுதல், இயன்றளவு இயற்கையைப் பாதுகாத்தல் போன்றவை சிறந்த நடவடிக்கைகளாகும். மேலும் நாளைய சந்ததியினருக்காக நாம் விட்டுச் செல்லக்கூடிய சிறந்த சொத்து ஆரோக்கியமானதொரு வாழிடமாகும். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *