தொடர்பாடல்
தொடர்பாடல்
உலகத்தின் இயக்கத்தில் தொடர்பாடல் இன்றியமையாததாகும். தொடர்பாடலின் கதை இற்றைக்கு 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்துக்குக்குரியதாகும். தொடர்பாடல் குறித்து பல எண்ணக்கருக்களை பலர் முன்வைத்துள்ளனர். அவற்றில் சில எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. வரைவிலக்கணங்களும் சுருக்க விளக்கங்களும் அவ்வகையில் ஏராளமானவையாகும். உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் தொடர்பாடல் பொதுவானது மட்டுமல்லாமல் அவசியமானதாக காணப்படுகின்றது.
ஒவ்வொரு உயிரினமும் அடிப்படையில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே தொடர்பாடுகின்றது. அதன் அவசியத்தையும் அங்கிருந்துதான் விளங்கிக்கொள்ள முடியும். மனிதனைப் பொருத்தவரையில் தொடர்பாடலும் வளர்ச்சிக்குட்படுகின்ற ஒரு விடயமாகும். அந்த எண்ணக்கருவை ஆராய்ந்து பார்ப்பதற்கு இன்றுள்ள சூழலின் நவீன அம்சங்கள் துணை புரிகின்றன.
பொதுவாக தொடர்பாடல் என்பது ஒரு ஊடகத்தினைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் செயன்முறை என்று கூறலாம். அந்த செய்திகள் மொழி, உடல் அசைவு, கண் அசைவு, முக பாவனை , ஒலிப்பு முறை போன்ற ஏராளமான ஊடகங்களினூடாக பரிமாறப்படுகின்றன. அதில் செய்தி அனுப்புபவர், பெறுனர், ஊடகம் என்பவை முக்கியம் பெறுகின்றன.
ஊடகங்களில் சிறந்தது மொழி என்று கூறலாம். உலகில் ஏராளமான மொழிகள் காணப்படுகின்றன. அவை வெவ்வேறு பண்புகளை, அடையாளங்களை, தனித்துவத்தைக் கொண்டவையாக விளங்குகின்றன. மொழி சமூகக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகின்றது. ஒரு சமூகத்தில் தனிப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தி தொடர்பாடும் ஒரு நெறிமுறையே மொழியாகும். தமிழ் சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் உருவாக்கம் வெவ்வேறு சமூகக் குழுக்களின் அடிப்படையில் தோன்றியவையாகும்.
தொடர்பாடலில் சிந்தனைகள், உணர்வுகள், நடத்தைகள், போன்றவை வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக அணியும் ஆடையின் நிறம், பயன் படுத்தும் பொருட்களில் உள்ள பற்று, விருப்பங்கள் என்பன ஒரு தனி மனிதனை பிரதிபலிக்கின்றது. அதை சார்ந்து ஏனையவர்கள் அவர் பற்றி இலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் தொடர்பாடல் நிகழ்கிறது.
தொழில்நுட்பம் தொடர்பாடலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. பிற உயிரினங்களின் தொடர்பாடலில் பெரிய மாற்றங்கள் நிகழா விட்டாலும் மனிதரிடையே மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. பூகோள கிராமம், பூகோளமயமாதல், போன்ற சொற்பதங்கள் தொடர்பாடலை அடிப்படையாகக் கொண்டது. உலகத்தினை கையில் அடக்கும் செயன்முறை பூகோள மயமாதலாகும்.
பண்டைய தொடர்பாடல்களாக சத்தமான ஒலியெழுப்புதல், பறை இசைத்தல், புறாவின் மூலம் தூது விடுதல் கடிதம் போன்றவை இடம் பெற்றன எனலாம். இன்று நொடிப் பொழுதில் நூறு தகவல்களைக் கூட உலகின் எந்த மூலைக்கும் சென்றடையச் செய்ய முடியும். அந்தளவிற்கு தொடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இவ்வகையில் தொடர்பாடல் திறன் முக்கியத்துவம் பெறுகின்றது. தொடர்பாடல் திறன் என்பது ஒரு ஆளுமையாக வளர்ச்சி பெற்றுள்ளது. தொடர்பாடல் செம்மையுடையதாக அல்லது ஆரோக்கியமானதாக அமைந்தால் அது தொடர்பாடல் திறனில் அடங்கும். மனிதனின் ஆளுமை விருத்திகளில் இன்று தொடர்பாடல் திறனும் பரிசீலிக்கப்படுகின்றது. சிறந்த அணுகுமுறை, சுருங்கச் சொல்லி விளக்குதல், தெளிவு, சரளம் என்பவை அவ்வாறான திறன்களாகும். அதாவது தொடர்பாடற் குறைபாடுகள், தடங்கள், முன்னுக்குப் பின் முரண்படுதல், என்பவை இல்லாதிருத்தலும் சிறந்த பின்னூட்டலை ஏற்படுத்துபவையாகும்.
மனிதத் தொடர்பாடலானது எவ்வாறு, எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டதென்பதை கால அடிப்படையில் அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் கலைக் களஞ்சியங்களின் துணையுடனான தகவல்களின் மூலமும் டார்வினின் பரிணாம வாதக் கோட்பாட்டின் படியும் மனிதன் பற்றிய தகவல்களைப் பெறக்கூடியதாவுள்ளது. ஆரம்ப யுகத்தில் வாழ்ந்த மனிதன் விலங்குக் குடும்பத்தில் ஒருவனாக இருந்து பின்னர் பரிணாம வளர்ச்சியின் போது மூளை விருத்தியுடன் அறிவையும் பெற்றுக் கொண்டமை ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.
மானுடத் தொடர்பாடல் விஷேடமானதாக அமையாது அனைவருக்கும் அடிப்படையானதாகவும் இயலுமானதாகவும் அமைகின்றது. தன் எண்ணத்தில் உருவகப்படுத்துகின்ற விடயத்தை அதன் அம்சத்தில் எதுவித மாற்றங்களும் நிகழாதவாறு பெறுனரிடம் கொண்டு சேர்க்கும் போது சிறந்த மானுடத் தொடர்பாடலை ஏற்படுத்த முடியும். பேச்சு, மௌனம், எழுத்து, படம், அசைவு பார்வை என்பவை மானுடத் தொடர்பாடலின் வழக்கமான அம்சங்களாகும். மானிடர்களின் தொடர்பாடல்திறன் வளர்ச்சி பெறும் போது பல்வேறு சமூகத்தினர்களின் ஒன்றிணைவு ஏற்படுகின்றது. இதில் கலாச்சாரம், மதம், பண்பாடுகள் என்பவையும் தாக்கம் செலுத்துகின்றன.
மனிதனுக்கு முன் தோன்றிய உயிரினங்களின் கூர்ப்பே மனிதன் ஆவான். சிந்திக்கத் தலைப்படாத உயிரினமாகத் தோன்றிய அஃறிணைகள் தொடர்பாடலில் ஈடுபடுவதில்லை என்றும் கூறிவிட முடியாது. நுண்ணுயிர்கள் கூட தங்களுக்குள்ளே உள்ள இரசாயனங்களைப் பயன்படுத்தி தொடர்பாடலை மெற்கொள்கின்றன. செடிகளின் உயிர் தொழிற்பாடுகளில் அசைவும் ஒன்று. செடிகளில் குறிப்பாக பூஞ்செடிகள் தங்கள் குறிகளினூடாக தொடர்பினை ஏற்படுத்துகின்றன. அவை துல்லியமான இனப்பெருக்க செயற்பாட்டில் தாக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மிருகங்களை எடுத்துக் கொண்டால் அவை தங்கள் நடத்தையில் சில மாறுதல்களை ஏற்படுத்தி தன் இனம் சார்ந்த அல்லது சாராதவற்றோடும் தொடர்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக ஒலிப்பு முறைகள், மூலம் உடன்பாட்டை, எச்சரிக்கையை, எதிர்ப்பினைக் காட்டுதல் போன்றவற்றைக் கூறலாம்.
தொடர்பாடல் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது கல்வித் துறையில் தொடர்பாடற் கற்கைகள் தனிப் பிரிவாகக் காணப்படுகின்றது. மேலும் தொடர்பாடல் தேர்ச்சிகள், மொழி மற்றும் வெகுஜன ஊடகம், பொதுமக்கள் தொடர்பு, ஊடக கலாச்சாரம் என்பன தோற்றம் பெற தொடர்பாடலே காரணமாகும். அத்துடன் சமூகத்தில் தொடர்பாடல் மனித நாகரிகத்தின் உண்மையான பணிகளை நிறைவேற்றுகின்றது. வெறும் செய்தி, தகவல், கருத்துக்களைப் பரிமாறுவது மட்டும் தொடர்பாடல் பணியாகாது. தொடர்பாடல் மூலம் பல்வேறு நோக்கங்கள் நிறைவேற்றப்படுதல் எதிர் பார்க்கப்படுகின்றது. அந் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் செய்தி உருவாக்கம், கல்வி, கலாச்சாரப் பணி, கருத்து ரீதியான பணி சமூக ஒழுங்கமைப்புப் பணி, நிலை நிறுத்துதல், ஊக்கு விப்பு போன்ற செயற்பாடுகள் இடம் பெறுகின்றன.
தொடர்பாடலினுள் தன்னகத் தொடர்பாடல், ஆளிடைத் தொடர்பாடல், கூட்டுத் தொடர்பாடல், வெகுசன தொடர்பாடல், என்று பல வகைகள் காணப்படுகின்றன. இந்த தொடர்பாடல் வகைகளை பகுப்பாய்வு செய்து சமூக வாழ்க்கையில் அதனை பரீட்சிப்பதனூடாக ஏராளமான சிறந்த பயன்களைப் பெற முடியும்.