PAALAM.LK

கல்வி

கல்வி

இந்த இயற்கை இன்றுவரை இசைந்து வாழ ஏராளமான வழிகளை மனிதனுக்கு தந்துள்ளது. பிறப்பு முதல் நிகழ்வு என்றால் பின்னர் நிகழும் அனைத்தும் ஏதோ ஒன்றை அறிந்து கொள்ளும் ஆசையில் நிகழ்ந்தவையே அறிந்தவை அனைத்தையும் அறிவு என்று சொல்லலாம். அதன்வழி காலம் கடந்து வாழும் அறிவுச் செயன்முறையை கல்வி என்று கணக்கிடலாம். எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு பசி நீடித்திருக்கும். இன்னொரு வகையில் அது தீராத தாகமாய் மூளைக்குள் வாழும். உணவை மட்டும் உடலுக்குள் அனுப்பி பசி தீர்ந்ததா என்றால் பல விடயங்கள் பின்னும் மிச்சம் இருக்கும். தேவை என்றும் தேடல் என்றும் சிலர் அதை எடுத்துக் கொள்வதுண்டு. ஏதோ ஒன்றை கற்கும் தன்மை இல்லையென்றால் உயிரின் ஓசை நிசப்தமாய் விளங்கும். வாழ்க்கை அர்த்தமற்றதாய் மாறிவிடும். சக்திகள் வெளிப்படாது சரித்திர சம்பவங்களும் நிகழாது.


முன்னோர் தம் வாழ்வில் கண்ட அனுபவங்களின் பேறாக பெற்ற அறிவினைத் தொகுத்து அடுத்த சந்ததிக்கு வழங்கினர். பின்வந்தவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றாற்போல் அவற்றை மேம்படுத்தினர். பல துறைகளில் அனுபவங்கள் பல வகைப்பட்டதாக விளங்கின. அது முறைவழிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தொகுக்கப்பட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் மேம்படுத்தப்பட்டது. ஒரு தலைமுறை வாழ்வின் இருதியில் பெற்ற அறிவு அடுத்த தலைமுறையின் ஆரம்ப பருவத்தில் பொதிக்கப்பட்டது. ஒரு வகையில் அன்றைய சமூகத்தில் வாழ தயார் செய்வதே கல்வியின் நோக்கமாகக் காணப்பட்டது. உலகின் கல்விப் பாரம்பரியம் இடத்திற்கு இடம் வேறுபட்டதாகக் காணப்பட்டாலும் தமிழர் பண்பாட்டில் கல்வி மிகத் தொன்மையான அம்சங்கள் கொண்டு விளங்குகிறது. ஆரம்பத்தில் வாய்மொழி மூலமாக போதிக்கப்பட்ட கல்வி எழுத்து வடிவம் பெறுவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. நம் பாரம்பரியத்தில் குருகுலக் கல்வி முறையில் குருசீட அமைப்பு மிக உன்னதமானது. மற்றும் அரண்மனைக் கல்வி, அரசர்களுக்கு உரியதாக விளங்கியது. குருவின் மேலுள்ள பற்றுதல் காரணமாக தட்சனை வழங்கல் இடம்பெற்றது. அவரது ஆச்சிரமத்திற்கு சென்று தங்கி குருவிற்கும் குரு பத்தினிக்கும் வேண்டிய பணிவிடைகளைச் செய்து கல்வி பெறப்பட்டது. குருவை சேராமல் கூட, கல்வி கற்ற பாரம்பரியத்தை “ஏகலைவன்” போன்றோரது வரலாறு எடுத்துக் கூறுகிறது.


இன்றைய நவீன தொழிநுட்ப சூழலில் கல்வி பல வழிகள் முன்னேற்றமடைந்துள்ளது. ஒழுக்க நெறிகள், திறமைகள், கோட்பாடுகள் என பல அம்சங்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. பெரும்பாலானவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்து செயல்படுகின்றனர். குழந்தைகளுக்கு இளமையில் கல்வியைப் பெற்றுத் தருவதே பெற்றோரின் சிறந்த கடமையாகும். இதனாலேயே கட்டாயக்கல்வி என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜக்கிய நாடுகளின் கல்விக்கான உரிமையினால் அங்கீகரிக்கப்பட்டு பல நாடுகளின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட வயது வரை கட்டாய கல்வி பெற வேண்டும் என்பதை சட்டமாக்கியுள்ளது.


கல்வி பல வகைப்பட்டதாகக் காணப்படுகிறது. ஆனால் எல்லோராலும்    ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் பிரதானமாக இருவகைப்படுத்தலாம். முறையான கல்வி மற்றும் முறைசாரா கல்வி என்பவையே அவையாகும். கல்வி கற்பதற்கான உலகளாவிய உரிமையை அங்கீகரிக்கும் நோக்கில் அவை ஏற்படுத்தப்பட்டன. முறையான கல்வியென்பது திறன்களை வளர்கும் நோக்குடன் முறையான  நிகழ்ச்சியைக் குறிக்கும். இது முறைப்படி வகுக்கப்பட்ட நியம முறையிலான பாடத்திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. சமூக மெம்பாட்டிற்கு தேவையான அணுகுமுறைகள் இங்கு காணப்படும். இது பாலர்கல்வி, இடைநிலை கல்வி, உயர் நிலைக்கல்வி எனப் பல பிரிவுகளில் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு விருப்பமான மற்றும் இயலுமான துறையில் நிபுணத்துவம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொதுக்கல்வி, தொடர்ச்சியான கல்வி என்பன தற்போது நடைமுறையில் உள்ளன. இவை முறையான கல்வி வடிவங்களில் சிலவாகும். சில நேரங்களில் துறைக்கு ஏற்ப கல்வி வகை மாறுபடும் தன்மை கொண்டது. தனியார் கல்வியும் இன்று முறையான கல்வியின் ஓர் அங்கமாக காணப்படுகிறது. 


முறைசாராக் கல்வி பற்றி 1960 களுக்கு பின்னரே சிறந்த கருத்துக்கள் தோற்றம் பெற்றன. அந்தவகையில் கூன்ஸ் மற்றும் அகமட் போன்ற அறிஞர்கள் தான் முதன்முதலில் முறைசாரா கல்வியை வரைவிலக்கணப்படுத்தினார்கள். நிறுவனமயமாக்கப்பட்ட கல்வியமைப்புக்கு புறம்பாக இடம்பெறும் பிரத்தியேகமான அல்லது பரந்த ஏற்பாடான கற்றல் நடவடிக்கை முறைசாரா கல்வியாகும். தொழிற்கல்வி, நிர்வாகக் கல்வி போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்களாகும். கனடாவில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருட்களை பாவனைப்படுத்தல், கையாளுதல் போன்ற பயிற்சியை வழங்குகிறது. மேலும் கனடாவின் பழங்குடியினர் தாம் செய்யும் ஜீவனோபாய தொழில்களான மீன்பிடித்தல், வேட்டையாடுதல் என்பவற்றை முறைசாராக் கல்வியினூடாக அடுத்த சந்ததியினருக்கு கடத்துகின்றனர். இவ்வாறு திமிங்கில வேட்டை என்பது கனடாவின் மூத்த குடியினரிடமிருந்து தொன்று தொட்டு பேணப்பட்டு வருகிறது. 


இலங்கையைப் பொருத்தவரையில் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு காணப்படுகிறது. மேலும்,

• மாகாண கல்வித் திணைக்களம்

• கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 

• இலங்கைப் பரீட்சைத்திணைக்களம் 

• தேசிய கல்வி நிறுவகம் 

• தேசிய நூலக மற்றும் சுவடிக் கூடச் சேவைகள் சபை

• கல்விப் பணிப்பாளர் அலுவலகம்.

• கல்வியற் கல்லூரி 

• ஆசிரியர் கல்லூரி 

• இலங்கை நூலக அபிவிருத்திச் சபை 

• இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு 

• பிரிவெனாக் கல்வி சபை 

• அரச அச்சக கூட்டுத் தாபனம். 

போன்ற கல்வி நிறுவனங்கள் கல்வி அமைச்சுடன் இணைந்து செயலாற்றுகின்றன. 


அதுமட்டுமன்றி முறைசாராக் கல்வியையும் ஆதாரிக்கும் முகமாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கனப்படுகின்றன. பல வகைக் காரணங்களுக்கமைய பாடசாலை செல்லக்கூடிய வயது கொண்ட பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக கட்டாயக் கல்வி குழுவினை சமகாலப்படுத்தும் நோக்குடன் பல வேலைத்திட்டங்கள் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்டு வருகின்றன. மற்றும் சிறைச்சாலைப் பாடசாலைகளில் ஆலோசனை வேலைத்திட்டங்களை நடாத்துதல், தெருச்சிறார்களுக்காக வகுப்புகளை நடாத்துதல் என்பன இடம் பெருகின்றன. மேலும் சமூக கற்கை மத்திய நிலையங்களில் வருமானத்தை ஈட்டும் பாடநெறிகள் அமுல்படுத்தப்படுகின்றன.


பிற நாடுகளிலும் கல்வி நடவடிக்கைகள் சார்ந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்துள்ளன. குறிப்பாக 20 நூற்றாண்டிலேயே ஜரோப்பிய நாடுகளில் கல்வி மேம்பாடுகள் நிகழ்ந்தமைக்கான சான்றுகள் உள்ளன. போலொக்னா பிரகடனம் அதற்கு சிறந்த உதாரணமாகும். இது ஜரோப்பிய நாடுகளின் உயர்கல்வி தரத்தினை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது. உலக அளவில் ஜரோப்பிய உயர் கல்வி முறையை புத்துயிர் பெற வைத்தது. இதனால் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அங்கீகாரம் என்பவை பெற்றுக் கொடுக்கப்பட்டது. 


மேலும் பல நாடுகளில் தாய்மொழிக் கல்வி இடம் பெறுகிறது. பிறமொழிக் கலப்பு பாடங்களின் ஆழமான புரிந்துணர்விற்கு தடையாக அமையும் சிக்கலான தன்மையும் கல்வியில் உண்டு. தங்கள் தாய்மொழியில் கற்கும் போது இலகுவில் அனைத்தையும் கிரகிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அநேக நாடுகள் தாய்மொழிக் கல்வியை வழியுறுத்துகின்றன. தாய் மொழிக் கல்வி மாணவர்களின் தன்னம்பிக்கை, மற்றும் பேச்சாற்றல் என்பவற்றை வளர்க்கின்றது. தாய்மொழிக் கல்வியினூடாக ஆக்கபூர்வமான சிந்தனைகள் குழந்தைகள் மத்தியில் கொண்டு வர முடியும். 


மேலும் எழுத்து இல்லாத மொழிகள், சிறுபான்மையினர் பேசும் மொழிகள், இலக்கணங்கள் சரிவர இல்லாத மொழிகள், மொழி வளர்ச்சி அடையாத மொழிகள் பிற மொழிக்கு சமமான சொல்வளம் அல்லாத மொழிகளில் தாய்மொழிக் கல்வி சவாலான விடயமாகும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் தொன்மையும் கலாச்சாரமும் கொண்ட தமிழ்மொழி மேற்கூறப்பட்ட அனைத்து மொழிக்கான அம்சங்களையும் கொண்டது ஆனபோதிலும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் கணிசமான அளவிலேயே நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

                                            

இயற்கையாக நாம் பெற்ற அறிவினை மேலும் வளர்த்தல் கல்விச் செயற்பாட்டில் இடம் பெறுகிறது. நூலறிவு என்பது செயற்கையாக கிடைக்கப்பெறுவது. ஒரு கல்வி கற்ற சழுதாயம் நாட்டை சுபீட்சமாக்கும் சக்தியாகும். புதிய கண்டுபிடிப்புக்கள், சமூகமயமாக்கம் போன்றவை கல்வியின் பேறாக கிடைக்கப் பெறுபவை மேலும் சகல துறை சார்ந்த வளர்ச்சிகளும் கல்வியை அடிப்படையாகக் கொண்டவை. சரியான வழியில் சந்தோசம் அடையக் கற்றுத் தரும் கல்வியே சிறந்தது. அது முறைசார்ந்ததாக அல்லது முறை சாராததாக அமைந்தாலும் கல்வியென்பது பொதுவானதும் அவசியமானதுமாகும்.     

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *