சமூகமயமாக்கல்
சமூகமயமாக்கல்
சமூகமயமாக்கல் பற்றிய கருத்துக்கள் முதன்முதலில் 40 களின் பிற்பகுதியில் 50 களின் முற்பகுதிகளில் தான் விரிவாக்கப்பட்டது. சமூகவியல் குறித்த சிறந்த கருத்துக்களையும், ஆய்வுகளையும் ஏற்படுத்திய சமூகவியலாளரான Emile Durkhem இது பற்றி கூறுகையில், மக்கள் ஒரு சமூகக் குழுவில் உறுப்பினர்களாக செயற்படுகின்ற வகையில் செயல், நோக்கம், அறிவு, மொழி, திறன்கள், விழுமியங்கள், விதிமுறைகள், வாழ்வின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றை பெறும் வகையிலான ஒரு செயற்பாடே சமூகமயமாக்கல் என்கிறார்.
அதாவது மனித நடத்தை மாற்றங்களுக்குக் காரணமாக அமைவதே சமூகமயமாக்கல் ஆகும். இச் செயன்முறையின் மூலம் ஒரு தனிநபர் தனக்கான அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள உலகம் குறித்த அறிவையும் அச் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனையும் கற்றுக் கொள்கிறார். சமூகமயமாக்கம் ஒரு தொடர்ச்சியான மற்றும் வாழ்நாள் முழுவதும் இடம்பெறும் செயன்முறையாகும். இது சமூக வாழ்வில் நிபுணத்துவம் அடைய உதவுகிறது. சமூகமயமாக்கல் விரிவடையாது போனால் வளர்ச்சியின் அடுத்த கட்டம் தோன்றாது, சிதைவுகள் தடுக்கப்படாது. ஆகவே இவ்வாறான ஒரு முதிர்ந்த ஆளுமையின் வெளிப்பாடாக இது அமைகிறது. மேலும் இந்த சமூகமயமாக்கல் ஒரு குறிப்பிட்ட வழியில் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதோடு மானுடர்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கவியல் மூலம் அனைவருக்கும் பொதுவான அறிவினை உருவாக்குகிறது.
சமூகமயமாக்கலில் பல சமூக காரணிகளும், சமூக நிறுவனங்களும் தாக்கம் செலுத்துகின்றன. இது பலவகைப்பட்டதாகவும் காணப்படுகிறது. அவற்றில் பிரதானமாக நுண்நிலை சமூக மயமாக்கம், பருநிலை சமூகமயமாக்கம் என்ற வகைப்பாடுகள் இடம்பெறுகின்றன. நுண்நிலை சமூகமயமாக்கம் என்பது சமூக இடைவினை, சமூக கட்டுப்பாடு போன்ற குவி மையங்களின் ஊடாக சமூகமயமாக்கப்படுதலாகும். பருநிலை சமூகமயமாக்கம் என்பது குறித்த சமூகத்தின் பண்பாடு, சமூக கட்டமைப்புக் குழுக்கள், நிறுவனங்கள், போன்ற மையங்களின் ஊடாக சமூகமயமாதல் ஆகும். மேலும் அபிவிருத்தி சமூகமயமாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கான சமூகமயமாக்கம் என பல பிரிவுகளில் இது இடம் பெறுகிறது.
சமூகமயமாக்கலின் முக்கிய அம்சமாக தனி நபரினை சமூகத்தோடு தொடர்பு கொள்ள வைத்தல் காணப்பாடுகிறது. பெரும்பாலும் இது கல்வி நிறுவனங்களின் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் தற்செயலாக ஒரு நபர் சமூகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு அதன் அம்சங்களை அனுபவம் மூலம் பழகி அதன் கஸ்டங்களை எதிர் கொண்டு சமூகமயமாக்கம் பெறுகின்றார். இதன் விளைவாக தனி மனித ஆளுமையில் முன்னேற்றம் நிகழ்கிறது. மேலும் சமூகத்தின் அமைப்பு செயல்பாடு குறித்து தீர்க்கமான முடிவுகளுக்கு வர முடிகிறது.
சமூகமயமாக்கல் குழந்தைப்பருவம் தொடக்கம் முதிர்ந்த ஆளுமை உருவாக்கம் வரை நடைபெறுகிறது. அது ஒரு தொடர் நிகழ்வாகும். குழந்தைப் பருவத்திலேயே முதன்மை சமூகமயமாக்கல் செயற்பாடு இடம் பெறுகின்றது. குடும்பம் இதில் முக்கிய பங்கு வகிக்கும் அடிப்படை சமூக நிறுவனமாகும். காலப்போக்கில் அடுத்து நிகழும் ஏனைய சமூகமயமாக்க அம்சங்களை ஏற்று நடக்கும் தன்மையை குடும்பம் தான் உருவாக்குகின்றது. குறிப்பாக சமூகம் தொடர்பான நேர் மறையான கண்ணோட்டங்கள் தோன்றுவதற்கு இந்த முதன்மை சமூகமயமாக்கமே உந்து சக்தியாக அமைகிறது எனலாம். குழந்தைகள் வளர்ந்து குடும்பத்தைத் தாண்டி சமூகத்திற்குள் நுழையும் போது புதிய விதிகளின் படி, புதிய சூழலில் செயற்பட வேண்டியிருக்கும். அதனை முறைப்படுத்தும் செயன்முறையே முதன்மை சமூகமயமாக்கமாகும்.
இரண்டாம் நிலை சமூகமயமாக்கம் நடத்தை மாற்றங்களையும், புதிய வடிவங்களையும் சந்திப்பதாகும். அதுவும் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்துகிறது. அதாவது அது முதன்மை சமூக மயமாக்கப் பருவத்திலிருந்து வேறுபடுவதை கண்கூடாக காண முடிகிறது. வேறுபட்ட சமூக மதிப்புகளை உருவாக்கவும், கற்கவும், ஏற்று நடக்கவும் ஆளுமையைப் பெறுதலே இச் செயன்முறையாகும். ஆனால் முதன்மை நிலையில் ஏற்பட்ட மாற்றங்களோடு ஒப்பிடும் போது இதில் குறைவான மாற்றங்களே நிகழுகின்றன. தொடர்ந்து குழு சமூகமயமாக்கம் நடைபெறுகின்றது. இதில் ஒரு தனி மனிதன், நண்பர்கள் குழு போன்ற வேறுபட்ட குழுக்களுடன் இணைந்து செயலாற்றுவதையும் புதிய நடத்தை விதிகளை கடைபிடிப்பதையும் கற்றுக் கொள்கிறான். அடுத்து பாலின சமூகமயமாக்கம் நிகழ்கிறது. தன் பாலினத்தவர்களுடனான முன்னெடுப்புகளைத் தாண்டி எதிர்ப் பாலினம் குறித்த அறிவு, நடத்தை முறைகள், வரை முறைகள் என்பவற்றை அறிந்து செயற்படுவதே இதுவாகும்.
சமூகமயமாக்கலில் சமூக நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. மனிதனின் அன்றாட சமூக வாழ்க்கை பெரும்பாலும் ஏதோ ஒரு சமூக நிறுவனத்தோடு தொடர்பு பட்டதாகவே காணப்படுகின்றது. இது நிறுவன சமூகமயமாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடும்பம், கல்வி, திருமணம், பொருளாதார அமைப்பு, மொழி, மதம், வெகுஜன ஊடகம், அரசு ( சட்ட அமைப்பு, தண்டனை அமைப்பு ) என்பன அவ்வகையில் சமூகமயமாக்கலில் தொடர்புபடும் முக்கிய சமூக நிறுவனங்களாகும். மேலே உள்ள அனைத்து வகையான சமூக நிறுவனங்களும் ஒற்றைச் சமூகமயமாக்கல் செயன்முறையின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். ஒருகிணைந்த ஆளுமை உருவாகுவதற்கு, மனித உறவுகளின் ஒவ்வொரு பகுதியிலும் சமூகமயமாக்குவது அவசியமாகும்.
சமூகமயமாக்கல் என்ற செயன்முறைக்குள் பல துறைகள் ஒன்றிணைகின்றன. அவ்வாறு கலாச்சார, மானுடவியல், மனோ பகுப்பாய்வு, இடைவினை உளவியல் போன்ற பல்வேறு அறிவுத்துறைகள் இடம் பெறுகின்றன. நிபந்தனைகளை உருவாக்கல், உற்று கவனித்தல், பங்கு கொள்ளுதல், பழக்கப்படுதல் போன்ற செயன்முறைகள் சமூகமயமாக்கல் இடம் பெறுகின்றன. இந்த செயன்முறைகளை சமூகவியலாளர்கள் பின்வரும் படிநிலைக்குள் கட்டமைத்துள்ளனர்.
1. மைக்ரோ சிஸ்டம் – தனி நபர் நேரடியாக ஈடுபடுதல்.
2. மீசோ சிஸ்டம் – தனி நபருக்கும் சமூக கூறுகளுக்கிடையிலான தொடர்பாகும்.
3. எக்ஸோ சிஸ்டம் – தனி நபருடன் நேரடியாக தொடர்பு கொள்ளாத நிறுவனங்களைப் பற்றியது.
இன்றைய சமூகமயமாக்கல் மிகவும் துரிதமானதாகும். நவீன முறைக்கு ஏற்றாற் போல் சமூகமயமாக்கத்தின் தன்மையும் வேறுபட்டுள்ளது. நவீன ஊடகங்கள் அதில் பெரும் பங்காற்றுகின்றன. மனிதன் தான் வாழும் சமூகம் பற்றி அறிவதற்கு ஏராளமான வழிகளை ஊடகங்கள் ஏற்படுத்தித் தருகின்றன. ஏனைய சமூக நிறுவனங்களான குடும்பம், கல்வி, மதம் போன்றவைகளையும் தாண்டி ஊடகமானது தனி மனிதனது சமூக நடத்தையை தீர்மானிப்பவையாக விளங்குவதனை தற்கால சமூக நடத்தைகளில் இருந்து அறியலாம். ஒரு சமூகத்தில் ஊடகத்துறையானது ஒழுங்கான ஊடக ஒழுங்குகளைக் கடைபிடித்து செயலாற்றும் போது சிறந்த மனிதர்களை உருவாக்கும் சிறந்த சமூகமயமாக்கத்தை வழங்க முடியும்.
இவ்வாறு சமூகமயமாக்கல் மூலம் நடத்தை விருத்தி, சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல், பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளல், பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகளைக் கண்டறிதல். வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ளல், சமூகத்தோடு இணைந்து வாழும் ஆற்றலைப் பெறல், சமூக விழுமியங்களை மதித்துப் பேணல், தன்னை அறிதல், தனது உள்ளார்ந்த விடயங்களை வளர்த்துக் கொள்ளல், ஒழுக்கவியல் பண்புகளை அறிந்து கடைபிடித்தல், போன்ற பல்வேறு அம்சங்களை வளர்க்கும் தகமைகள் உருவாகிறது என உறுதியாகக் கூற முடியும்.