PAALAM.LK

இலட்சியம்

இலட்சியம்

வாழ்க்கைப் பயணம் மணித்துளிகளை மைல் கல்லாக்கி கடந்து போகின்றது. உழைக்கின்ற அனைவருக்கும் ஒவ்வொரு கனமும் கனவுகளோடு நகர்கிறது. கனவுகள் மனித மனதின் மாபெரும் படைப்பு. மிருகங்களுக்கு நாளை பற்றிய கவலை இல்லை தன் இருத்தலை நிலைபெறச் செய்யவே வேட்டையாடும், உணவு தேடும், வாழிடத்தை அமைத்துக்கொள்ளும். ஆன போதிலும் தனக்கு வலி தரக்கூடிய செயல்களில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொள்கின்றன. அதாவது அவை மறுபடியும் அவ்வாறான செயல்களில் ஒருபோதும் ஈடுபடுவதில்லை.

ஆனால் மனிதன் அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டு செயல்படுகிறான். எதிர்காலம் பற்றி சிந்திக்கிறான். வலிகளைத் தாண்டி சாதிக்க முனைகிறான். கனத்திற்கு கனம் ஏராளமான புதிய விடயங்களைக் கற்றுக் கொள்கிறான். இந்த வகையில் கல்வி சமுதாயத்தின் அடிப்படை தேவையாகி விடுகிறது. கல்வி முறை காலத்திற்கு காலம் பரிணாம வளர்ச்சி கண்டு இன்றைய நவீனத்தை அடைந்துள்ளது. கற்றவர்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் சாதித்தவர்களின் வரலாற்றை மட்டுமே சரித்திரம் பேசுகிறது.

அவ்வாறான சாதனைகள் ஒரு கனத்தில் நிகழ்ந்தவை அல்ல. சரியான சிந்தனையின் இலட்சிய விதைகள் அவை. ஒரு குழந்தையின் பிறப்பில் இருந்து அச் சிந்தனையின் வளர்ச்சியைக் காணலாம். தாயின் கருவறையில் வளரும் சிசுவின் உடல் பாகங்களில் முதலில் சிறத்தலடையும் பகுதி மூளையும் செவிமடுக்கும் பகுதியுமாகும். சிசு உலகை அறியும் செயன்முறை கேட்டல், அவதானித்தல், பகுதியில் இருந்தே தொடங்குகிறது. பண்டைய குருகுலக் கல்வி கூட செவி வழியாகவே போதிக்கப்பட்டு வந்தது. தனக்கு விருப்பமான துறையும் சாதிக்கும் துறையும் தெரிந்து கொண்டவற்றில் இருந்தே தெரிவு செய்யப்படும்.

குழந்தைப்பருவத்தை விளையாடித் தீர்த்தவர்கள் கைக்கொள்ளும் அடுத்த பயணச் சீட்டு “நோக்கம்” ஆகும். இதன் பயன் அறியாதவர்கள் கால் போன போக்கிலும் மனம் செல்லும் பாதையிலும் சாதாரண வாழ்க்கையையே வாழ்கின்றனர். நோக்கத்தை சரியாக முறைவழிப்படுத்துவது அவசியமாகும். வழி காட்டுவதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என்று ஏராளமானவர்கள் நம்மைச் சுற்றி தோன்றுவார்கள். ஆனால் எங்கே செல்ல வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு இடத்திற்கு செல்வதற்கு முடிவெடுத்த பின்பு கேள்விகளை கேட்கும் போது தான் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற ஆலோசனை கிடைக்கும். சரியான இலட்சியம் தான் நோக்கம் என்றால் அதை அடையும் வழியும் கண்முன்னே விரிவடையும்.

மேலும் நோக்கம் தான் ஒருவனது பழக்கத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. அதாவது எதிர்காலத்தில் இப்படித்தான் ஆக வேண்டும், என்பது நோக்கம் என்றால், அந்நோக்கத்திற்கு ஏதுவானவற்றை செய்தலும், பொருத்தமற்றவையை தவிர்த்தலும் பழக்கமாகிறது. அவ்வாறு உருவாகிய பழக்கம் எதிர்காலத்தை உருவாக்குகின்றது. எதிர்காலம் பற்றிய எண்ணம் நோக்கம் ஆகிறது. இது ஒரு சுழற்சி முறையில் செயல்பட்டு லட்சியத்தை நிறைவேறச் செய்கிறது.

முதல் அடி வைத்தல் என்பது நோக்கத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று. எந்த துறையை நோக்கினாலும் சாதக பாதக தன்மைகள் தவிர்க்க முடியாதவை. ஆனபோதிலும் முதல் அடி வைத்தல் முக்கியமானது. இரவில் காரில் பயணிக்கும் ஒருவருக்கு சென்றடைய வேண்டிய முழுப்பாதை பற்றியும் தெரிய வேண்டியது அவசியமில்லை. காரின் மின்சூழ் விளக்கின் வெளிச்சம் படும் பாதை மாத்திரம் தெரிந்தால் போதும். அதை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் சென்று விடலாம். அது போலதான் நம்பிக்கையோடு எடுத்து வைக்கும் முதல் அடியும் சக்தி வாய்ந்தது. அடுத்த வழி பிறக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் அது அமைய வேண்டும்.

வரலாற்றில் சாதனை புரிந்த அனைவருக்கும் தாங்கள் இவ்வாறான சாதனையை நிகழ்த்தப் போகிறோம் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனபோதிலும் அவர்கள் நம்பிக்கையோடு ஏறிய முதல் படியிலேயே சாதனை தொடங்குகிறது.

தோல்வி ஏன் நிகழ்கிறது? என்ற வினாவுக்கான விடையினைக் கண்டறிந்தவர்கள் வெற்றியின் ரகசியத்தையும் அறிந்து கொள்கின்றனர் நம்மைச் சுற்றி நிகழும் சாதக பாதக தன்மைகள், எண்ணங்களின் வெளிப்பாடே என்பது பலரால் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் குழப்பம் இங்கு தான் தோன்றுகிறது. நினைத்தது தான் நிகழ்கிறது என்றால் “தோல்வியடையக் கூடாது” என்பதையே நான் நினைத்தேன் ஆனால் விளைவு தோல்வியாக இருந்தது. ”இதில் நான் நினைத்தது எங்கே நிகழ்ந்தது? ” என்பது உங்களது கேள்வியாக இருந்தால் அங்கிருந்துதான் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலானவர்கள் தங்களுக்கு எது நடக்க வேண்டும். என்பதை விடுத்து எந்த அனுபவம் கிடைத்து விடக்கூடாது என்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். “தோல்வி கிடைக்கக் கூடாது” என்று நினைத்தாலும் அதில் தோல்வி பற்றிய சிந்தனை மட்டுமே சூழ்ந்துள்ளது. வெற்றியையும், வெற்றி கிட்டும் போது அடையும் மகிழ்ச்சியையும் எண்ணத்தில் விதைக்கும் ஒருவர் கண்டிப்பாக தோல்வியை சந்திப்பதில்லை. எதை செய்யக்கூடாது என்பதை விடுத்து எதை செய்ய வேண்டும் என்பதிலேயே எமது முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்.

உலகமும் உங்களுக்கு பரிசளிக்க காத்துக்கொண்டு இருக்கிறது. எண்ணங்கள் செயல்களாக மாறுகின்றன என்று சில வார்த்தைகளில் சொல்லி விடலாம். ஆனால் மனித மனம் ஒரு கற்பனையான, கேளிக்கையான, மனக்கோட்டையை கட்டும் இடம் அல்ல. நினைத்ததை நிகழச்செய்யும் ஒரு அறிவியல் தளம். உலகமும் இச் செயன்முறையில் பங்கு கொள்கிறது. சரியான சிந்தனை ஓட்டத்தை உடையவர்கள் பாடுகின்ற பாட்டுக்கு சேர்ந்து ஆடுகிறது உலகம். இலட்சியத்தை நிறைவேற்ற தேவையான மனிதர்களையும், வாய்ப்புகளையும், தொடர்புகளையும் எதிர் பார்க்கும் போது உலகமே அதனை கொண்டு வந்து சேர்க்கின்றது. இதற்கு ஈடாக செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எமது கண்களை இன்னும் அகலமாகத் திறந்து எம் கனவுகளில் தெளிவு பெற வேண்டும். எண்ணியது கிடைத்து விட்ட போது ஏற்படுகின்ற உவகை, மகிழ்ச்சி, உல்லாசம் போன்ற உணர்வுகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வெண்ணங்களை விடாப்பிடியாய் வைத்துக் கொண்டே செயல்களில் ஈடுபட வேண்டும்.

 

முன்னோடிகளை கருத்திற் கொள்ளும் அதேவேளை தனித்துவத்தைப் பேணுதல் முக்கியமானதாகும். சாதிக்க விரும்பும் துறை எதுவாக இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்கியவர்களை முன்னுதாரணமாகக் கொள்வதே சிறந்தது. அவர்கள் சென்ற பாதைகள் எதிர் நோக்கிய பிரச்சினைகள், மேற்கொண்ட உத்திகள் என்பன இக்கட்டான நிலைமைகளில் உதவக் கூடியன. இதனையே வள்ளுவர்,

“செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல் ”

என்ற ஈரடி வெண்பாவினூடாக விளக்கினார். மேலும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு தனித் திறமையோடுதான் மண்ணில் பிறக்கிறான். பயணிக்கும் துறை ஒன்றாக இருந்தாலும் சென்று சேரும் கரை தனித்துவமானதாக இருக்க வேண்டும்.

வளர்ப்பதும் வளர்ச்சிக்கு உட்படுவதும் மனித நடத்தைக் கோலங்களில் நிகழுபவை. தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் பேசும் வார்த்தையும், காண்பிக்கும் காட்சியுமே ரு குழந்தையின் முதற் கல்வியாகும். முன்னர் கூறியது போல முதற் கல்வி செவி மடுத்தல், அவதானித்தல் ஊடாக நிகழ்கிறது என்றால் சரியான ஆரோக்கியமான உள்ளீடுகளை குழந்தை மனதில் விதைப்பது சாலச் சிறந்தது. ஏனென்றால் எந்தவொரு மாற்றத்தையும் முதற் தளத்தில் இருந்து தொடங்குவதே அழகாகும். பல்லூடகம் பெருகிய நவீன சூழலில் வாழும் நாம், திரைப்பட கதாநாயகர்களையே குழந்தைக்கு முதல் முன்னோடியாக காண்பிக்கின்றோம். விவேகானந்தரையோ அல்லது காந்தியையோ அவர்களைப் போன்ற சாதனையாளர்களையோ ஆராய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே வளர்ப்பின் சிறந்த பண்பு.

வளர்ச்சி சுயமாக நிகழ்கிறது. மனித வளர்ச்சி உடலினால் மட்டும் நோக்கப்படுவதல்ல. அறிவினாலும் வளர்ச்சி நிகழ்வதற்கு ஏற்ற முன்னேற்றமடைந்த சூழலில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “சிந்திக்க தெரிந்தவனுக்கு அறிவுரை தேவையில்லை” என்பது அப்துல்கலாம் அவர்களின் கோட்பாடுகளில் ஒன்று. சிந்திக்க ஆரம்பித்த வயது எதுவாக இருந்தாலும் தன்னை உயர்த்திக் கொள்ள, தகைமை வளர்த்துக் கொள்ள எவராலும் முடியும். சுய மேம்பாடு நிகழ்வதே சிறந்தது. வெளியே புறச் சூழலில் மாற்றம் நிகழ வேண்டும் என்றால் முதலில் ஒரு தனி மனிதன் தன்னுள் மாற்றத்தைக் காண வேண்டும். அதனால் லட்சிய விதைகளை விதைத்துக் கொண்டேயிருப்போம், முளைத்தால் மரம் இல்லையென்றால் உரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *