PAALAM.LK

கிராம சேவை அலுவலர்

கிராம சேவை அலுவலர்

இலங்கையில் வாழும் நாம் சமூகத்தின் சிறிய அலகான குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு வாழத் தலைப்பட்டுள்ளோம். அதைத் தாண்டி கிராமம், மாவட்டம், மாகாணம் என்ற ஒன்றிணைந்த சமூக கட்டமைப்பைக் கொண்டு விளங்குவதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சமுகம் என்ற ரீதியிலும், குடும்பங்களின் நேரடியான தலைப்பாடு நிலவுகின்ற முதல் தளம் என்ற வகையிலும் கிராமம் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வாறானதொரு நேர்த்தியான கிராமத்தை உருவாக்குவாக்குவதில் கிராம சேவையாளர் என்ற அரச அதிகாரியின் பங்கு இன்றியமையாததாகிறது. கிராம சேவையாளர் என்ற வார்த்தை எமக்கு புதிதான ஒன்றல்ல. நாம் அன்றாட வாழ்வில் அரச கருமங்களை நிறைவேற்ற முயலும் சில சந்தர்ப்பங்களில் கிராம சேவை அலுவலகரை சந்தித்த அனுபவம் எல்லோரிடத்திலும் உண்டாகியிருக்கும்.


கிராமிய மட்டத்தில் செயல்படுகின்ற அரசின் முதலாவது அலுவலர் கிராம சேவையாளர் ஆவார். அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் இணைப்பு அலுவலராகவும், பிரதேச நிர்வாகம் மற்றும் அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை கிராம மட்டத்தில் செயற்படுத்துகின்றவர் இவராவார். மாகாண சபையின் பிரதி நிதியாகவும் செயற்பட்டு பல்வேறு காரியமாற்றுபவராகவும் விளங்குகின்றார். இந்த பணிகளை நிறைவேற்றும் போது அவர் சட்டத்தினைப் போலவே சமூக அங்கத்துவ மற்றும் உயர் பண்புகள் என்பவற்றினால் பிணைக்கப்பட்டுள்ளார்.


தமது பிரிவில் சட்டத்தையும், சமாதானத்தையும், அமைதியினையும் பாதுகாக்கும் பணியும் கிராம சேவையாளருக்குரியது. மேலும் நியதிச்சட்டத்தினால் வழங்கப்பட்ட கடமைகளை செயலாக்கல், சமூக நலன்புரி செயற்பாடுகளை கொண்டு நடாத்துதல், கிராம மட்டத்தில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளின் இணைப்பை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.


இலங்கையில் 1962 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பின் மூலம், சிரேஸ்ட பாடவிதான சான்றிதழ் பத்திர பரீட்சையில் சித்தியடைந்தவர்களிடமிருந்து விண்ணப்பப் பத்திரம் பெற்றுக்கொண்டு கிராமசேவையாளர் பதவி நியமனத்திற்காக போட்டிப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டது. 1963.05.01 ஆம் திகதியில் இருந்து அப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு கிராம சேவை அலுவலர் நியமனம் வழங்கப்பட்டது.


1987 ஆம் ஆண்டளவில் நிலவிய கிராம சேவையாளர் பிரிவுகளின் எண்ணிக்கை 4451 ஆகும். அந்நேரத்தில் குறிப்பிட்ட ஒரு கிராம சேவை அலுவலர் பிரிவிற்குள் 5-10 வரையான கிராமங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. பின்னர் கிராமிய நலன்புரி மற்றும் கிராம அபிவித்தியினை நோக்காகக் கொண்டு ஒரு கிராம சேவை அலுவலர் பிரிவிற்குள் 2-3 கிராமங்கள் உள்ளடங்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் கிராம சேவை அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. இதற்காக 1987.02.25 அமைச்சரவையின் தீர்மானத்தின் படி விஷேட சேவை அலுவலர் 2402 பேர் கிராமசேவையாளர் சேவைக்கு உள்வாங்கப்பட்டனர். பின்னர் 1988.12.06 திகதி அமைச்சரவையின் தீர்மானத்தின் படி விவசாய அலுவலர் 4532 பேர் கிராம சேவையாளர் சேவைக்கு உள்வாங்கப்பட்டனர். 1989 ம் அண்டு இறுதியில் இங்கையில் கிராம சேவை அலுவலர்களின் எண்ணிக்கை 14730 ஆக காணப்பட்டது. 1992 மற்றும் 1996 ஆகிய வருடங்களில் போட்டிப் பரீட்சை மூலமும், 2000 ஆம் ஆண்டு சமுர்த்தி மற்றும் விவசாய அலுவலராக நியமனம் பெற்ற 1800 பேரை உள்வாங்கியும் கிராம சேவை அலுவலர் நியமனம் வழங்கப்பட்டது.


அதே நேரத்தில் இந்த கிராம அலுவலர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது ஏனைய திணைக்களங்களில் இருந்து இந்த அமைச்சுக்கு அலுவலர்களை இணைப்பு செய்தனர். மேலும் அந்த தினைக்களங்களில் நிலவிய வெற்றிடங்களினால் குறிப்பிட்ட எண்ணிக்கையினை விட குறைந்த தொகையினரே வருகை தந்தனர். இதன்படி 2012 ஆம் ஆண்டு 14009 பேரை கிராம சேவை அலுவலர்களை இணைத்து அந்த சேவை கொண்டு நடாத்தப்பட்டது. இவ்வாறாக இன்று வரை கிராம சேவையாளர் பதவி வெற்றிடங்களுக்காக பரீட்சைகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.


ஆரம்பத்தில் கிராம சேவையாளர் என்ற பெயரில் இந்த பதவி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பின்பு “கிராம சேவை அலுவலர்” என சேவையில் ஈடுபடும் அலுவலருக்கு பெயரிடப்பட்டது. ஆராயப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் கிராம சேவை அலுவலரின் அதிகார வரையறை ஆற்ற வேண்டிய கடமைகள், பொறுப்புக்கள் என்பன நியமனத்தின் முன்பும் சேவையாற்றும் போதும் அவர்களுக்கு தெளிவுறுத்தப்படுகிறது. இதற்காக வழிகாட்டல் நூல்களையும், கருத்தரங்குகளையும் சாதனமாகக் கைக்கொள்கின்றனர். அத்தகைய வழிகாட்டல் நூல்களின் நிமித்தம் சமுக அபிவிருத்தி, சமுர்த்தி பயன்பாட்டு முக்கியத்துவம், அரச காணி முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம், சிவில் பதிவுகளை மேற்கொள்ளுதல், உத்தரவுப்பத்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வெளியிடுதல் போன்ற அரச கருமங்கள் குறித்த தகவல்கள் தெளிவுறுத்தப்படுகின்றன.


அதுமாத்திரமன்றி ஒரு கிராம சேவையாளர் குடிசன மதிப்பு, நிழற்படுத்தல், மனித வியாபாரம் போன்ற பலதரப்பட்ட அறிவினைப் பெறும் பொருட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சம்பள அளவுத்திட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. கிராம சேவையாளரின் சுயமதிப்பீட்டு தேவையின் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்டு நாட்குறிப்புப் புத்தகம் ஒன்று வழங்கப்படுகிறது. அப்புத்தகத்தில், கிராம சேவையாளர் தனித்து சேவையாற்ற தேவையான அகப்புறகாரணிகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அலுவலர் நாளாந்தம் மேற்கொள்ளும் கடமைகளை அப்புத்தகத்தில் குறித்தல் வேண்டும். மற்றும் அப்புத்தகத்தைப் பயன்படுத்தி பிற நபர்கள் அதிகார துஸ்பிரயோகம் செய்யாதவாறு பாதுகாத்தல் வேண்டும். இவ் வகையில் தற்போது கிராம சேவையாளரினால் வழங்கப்படுகின்ற சில முக்கிய சேவைகள் பின்வருமாறு,


 1. நற்சான்றிதழ்கள், வதிவிடச் சான்றிதழ்கள் வழங்குதல்.
 2. வருமானச் சான்றிதழ்களை வழங்குவதற்காக சிபார்சு செய்தல்.
 3. மதிப்பீட்டு சான்றிதழ்களை வழங்குதல்.
 4. மதிப்பீட்டு அறிக்கைகள்  வழங்குதல்.
 5. தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல்.
 6. மரங்களை வெட்டுதல் தொடர்பாக பரிசீலனை செய்தல்.
 7. மரங்களை வெட்டுவதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு சிபார்சு செய்தல்.
 8. வெடிகலன்களுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு சிபார்சு செய்தல்.
 9. மரண அறிக்கைகள், சான்றிதழ்களை வழங்குதல்.
 10. வியாபாரப் பெயர்களைப் பதிவு செய்தல்
 11. முறைப்பாட்டுப் பிரதிகளை வழங்குதல்.
 12. பொதுசன மாதாந்த உதவிக்கான சிபார்சுகளை சமர்ப்பித்தல்.
 13. பதிவு செய்யப்படாத பிறப்பு இறப்புக்களை பதிவு செய்தல்.
 14. மாணவர் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்களை சிபார்சு செய்தல்.
 15. மரங்களை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்தல்.
 16. விலங்குகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரதிற்கு சிபார்சு செய்தல்.
 17. காணிச் சொத்துக்களை உறுதிப்படுத்தல்.
 18. நீர் மின்சார வசதிகளுக்கான விண்ணப்பங்களை சிபார்சு செய்தல்.
 19. பாரியளவு அனர்த்த நிவாரண உதவிக்கான சிபார்சுகளை வழங்குதல்.
 20. கள்ளுத்தவறணைக்கான அனுமதிப்பத்திரங்கள் சிபார்சு செய்தல்.
 21. பல்வேறுபட்ட நோக்கங்களுக்கான உரிய ஆவணங்களை பரிசீலித்து சிபார்சு செய்தல்.
 22. தன்னிச்சையான அமைப்புக்களைப் பதிவு செய்தல்.
 23. அரச காணிகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
 24. காட்டுக் கடடளைச்சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்.
 25. மதுபான அனுமதிபத்திரத்திற்கு சிபார்சு செய்தல்.
 26. சமாதான அலுவலராக கடமையாற்றல்.


இச்சேவைக்கான தகவல்களை சேகரித்து பிரதேச செயலாளருக்கு சிபார்சுக்களை சமர்ப்பித்தலும் கிராம சேவகருக்குரிய கடமையாகும். இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகமாக 7 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் மக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. பொதுவாக கையூட்டு மற்றும் லஞ்சம் உற்பட்ட அதிகார துஸ்பிரயோகம் நிகழ்வதற்கான காரணம், அரச அதிகாரிகளுக்கு தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றுவதற்கான கால அவகாசத்தை வழங்காமையேயாகும். தங்கள் அரச அலுவல்களை விரைவில் முடித்துக்கொள்ள வேண்டுமென்ற மக்களின் தேடலே ஊழலாக மாற்றமடைகிறது.அதனால் மக்களும் உரிய கால அவகாசத்தினை அதிகாரிகளுக்கு வழங்குதல் வேண்டும்.


அத்தோடு கிராம சேவை அலுவலரை சட்டத்திற்கும், சமூகத்திற்கும் தொடர்புபடுத்துகின்ற நியதிச்சட்ட ஏற்பாடுகள் பல உள்ளன. அவை சட்ட இலக்கம், ஆண்டு, பிரிவு என்பவற்றின் அடிப்படையில் ஏராளமானவை காணப்படுகின்றன. அவற்றில் மோட்டார் வாகனச்சட்டம், வன பாதுகாப்பு கட்டளைச் சட்டம், பிறப்பு இறப்பு தொடர்பான சட்டம், காட்டு விலங்குகளைப் பாதுகாத்தல், சமுக பிணக்குகள் தொடர்பான சட்டம், போன்றவை கிராம சேவை அலுவலரின் அதிகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சில சட்டங்களாகும். கிராம சேவை அலுவலர் இச் சட்டங்களுக்கு உட்பட்டு கடமையாற்றும் போது பொதுச்சட்டம், தனிநபர் சட்டம் என்பன பற்றி அறிந்திருத்தல் முக்கியமானது. பொதுச் சட்டம் என்பது ஏதேனும் ஒரு பிரஜைக்கும் அரசாங்க அல்லது சட்டத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் முரண்பாடு தோன்றும் போது அந்த முரண்பாட்டினை தீர்ப்பதற்காக பிரயோகிக்கப்படும் சட்டமாகும். தனி நபர் சட்டம் என்பது ஏதேனும் நபருக்கும் இன்னொரு நபருக்கும் இடையில் ஏற்படும் பிணக்கினை தீர்ப்பதற்கு பிரயோகிக்கப்படும் சட்டமாகும். இவ்விரண்டையும் தெளிவாக புரிந்து செயலாற்றும் கிராம சேவையாளர் சமூகத்தில் தற்றுணிவு மிக்கவராக மிளிர்கிறார்.


தற்றுணிவு என்பது ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஏதேனும் நடவடிக்கை அல்லது தீர்மானம் எடுக்கக் கூடிய அல்லது மாற்றுச் செயல் வழியினை பிரயோகிக்கின்ற நிலைமை என்று பொருள் கொள்ளலாம். சட்டத்தினால் /பாராளுமன்ற நியதிச் சட்டத்தினால் /பாராளுமன்றத்தின் நியதிச் சட்டத்தின் யாப்பின் மூலம் கிராம சேவை அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், ஏற்கனவே குறிப்பிட்டதன்படி ஏற்படுகின்ற தற்றுணிவு, அந்த தற்றுணிவினை சட்ட கோட்பாடுகளுக்கு அமைய பாவிக்க முடியாமல் இருப்பின் அந்த காரணத்தினால் ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகள் என்பன கருத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். வேலை இடை நிறுத்தம், இடமாற்றம், என்பன அத்தைகைய பாதகமான விளைவுகளில் சிலவாகும்.


பொது ஆட்சியில் பணித்துறை படிகள் வீழ்ச்சியடைந்திருந்தாலும் சட்ட ஆட்சியும், நல்லாட்சியுமான கொள்கைகளுக்கு பதில் கூறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. எனவே இங்கு பொது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதும் இன்றியமையாததாகவும் கருதப்படும் கிராம சேவகரின் பணிகள் நிச்சயிக்கப்படுவதை, நடை முறையிலுள்ள எந்த அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கிராம சேவையாளரின் பணிகளுக்கு ஏற்ற சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு நடைமுறையிலுள்ள அரசாங்கத்தினால் தேவையான வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். பொது மக்களின் சமூக அதிகாரியாக விளங்கும் கிராம சேவகருடைய சிபாரிசுகளுக்கு பிரதேச செயலாளர் பொறுப்புடையவராக கருதப்படுகிறார். சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த பணியினை மேற்கொள்ளவுள்ள கிராம சேவை அலுவலர்கள் ஆக்கபூர்வமான வகையில் மக்களுக்காக தம்மீது சுமத்தப்படுகின்ற சமூக கடப்பாடுகளை மேற்கொள்ளும் போது சில தடைகள் ஏற்படக்கூடும் எனினும் நல்லாட்சியை குறிக்கோளாகக் கொண்டு அத்தகைய தடைகளையும் கஸ்டங்களையும் எதிர் நோக்கவும் கிராம சேவை அலுவலர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் நல்லாட்சியின் தரத்தினை மேம்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *