தொழில்
தொழில்
நாளாந்தம் நாட்கள் நகர்கிறது என்றால், நாமும் வாழ்க்கைப் பயணத்தில் பங்கு கொள்கிறோம் என்று தான் அர்த்தம். மொத்த உலகின் நிலவுகையும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. அன்றாடம் செயற்படுதல், தேவைக்காக வாழ்தல், அவசியமானதொன்றோடு நகர்தல், என்றெல்லாம் தொழிலை சுருக்கமாக விளக்கலாம். உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் தங்கள் இருத்தலை நிலைபெறச் செய்வதற்கு அன்றாடம் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபடுகின்றன.
மேலும் கூர்ப்படைந்த சிந்திக்கத் தெரிந்த அங்கி/விலங்கு மனிதன் ஆகையால் பல்வேறுபட்ட தொழிற் பாகுபாட்டை உடையவன் ஆகிறான். பிறப்பு இறப்பு ஆகிய அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி முழுவதும் தொழில் புரியும் களமெனக் கொள்வதே பொருத்தமுடையது. பொதுவாக தொழில் சமூகத்தில் ஒரு அடையாளத்தை தோற்றுவிக்கிறது. மக்களின் பதவிகளும், தகைமைகளுமே அவ்வடையாளத்தின் பிரதிபலிப்புகளாகும். மாணவப் பருவத்தின் தொழில் கல்வித் தகைமை என்பது போல வைத்திய துறையில் மேற்கொள்ளும் தொழில் வைத்தியர் எனும் பதவியை தோற்றுவிக்கிறது. இது போன்றே அனைத்து விடயங்களுக்கும் தொழில் ஆதாரமாக விளங்குகிறது.
விவசாயி, ஆசிரியர், பொறியியலாளர், வாகனஓட்டுனர் என்று மக்கள் புரியும் தொழிலின் அடிப்படையிலேயே அழைக்கப்படுகின்றனர். மாற்றம் என்ற ஒன்றுதான் மாறாதது என்ற வகையில் இன்றைய தொழில் துறையிலும் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஆளுக்கேற்ற வேலை என்ற சமூகம் மாற்றமடைந்து வேலைக்கேற்ற ஆளாக தயார் செய்து கொள்ள வேண்டிய சூழல் தோன்றியுள்ளது.
தொழிற் துறையில் மாற்றங்கள் நிகழ்ந்த காரணத்தால் மக்கள் காலத்தோடு ஒன்றித்து பயணிக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பாக எந்த முயற்சிகளும் மேற்கொள்ளாத மக்களே பொருளாதாரத்தின் மிகப் பெரிய குறைபாடாக கருதப்படுகின்றனர். உற்பத்தி வளங்களுள் மனித வளமொன்றே நிர்வகிப்பதற்கு கடினமானதென்று பல்வேறு முகாமையாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். மேலும் மாற்றங்களை ஏற்கும் மக்களின் மனநிலை மாற்றங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. மாற்றம் பொதுவாக நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட விருப்பங்கள் எண்ணங்களை சிதைக்காமல் மனித வலுவையும், நேரத்தையும் வீணாக்காமல் நிகழ்வதே மாற்றமாகும். நவீனத்தை அடிப்படையாகக் கொண்டமைந்த இன்றைய தொழிற்துறை மாற்றங்கள் அனைத்தும் மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்டதால் அதை சரியாக பயன்படுத்த தெரியாத மக்களே நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ளாதவர்களாகிவிடுகின்றனர்.
அவ்வாறான மக்களின் அறியாமைக்கு காரணம் புதிய விடயங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வசதியின்மை, புதிய கல்வித்திட்டங்களை உரியவர்கள் தயாரித்து நடைமுறைப்படுத்த முடியாமை, போன்றவையாகும். மேலும் தொழிலில் மெதுவாக இயங்குதல், அக்கறையின்மை, முழுவதுமாக ஈடுபடாமை என்பவற்றையும் தடைகளாகக் கூற முடியும்.
எந்த தொழிலாயினும் அது தொடர்பான விளிப்பு, தெளிவு போன்றவை அவசியமாகும். தொழிலின் நிமித்தம் மேற்கொள்ளும் பகுதி வேலைகள், மற்றும் அலுவல்களின் தன்மை என்பவற்றை ஆராய்ந்தறிதல் முக்கியமானதாகும். குறிப்பாக தொழிலின் பால் உள்ள பற்று, விருப்பம், அலாதி என்பவற்றின் அளவீடு போன்றவை சரியான தொழிலை அமைத்துக்கொள்ள ஏதுவான காரணிகளாகும். உளம் மற்றும் சுற்றுப்புறச் சூழலின் தன்மை போன்றவை பணி புரியும் இடம் குறித்த ஆராய்ச்சியில் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இந்த பாதையில் ஒரு தொழிலை அனுகுபவர் சிறந்த பயனைப் பெறுகிறார்.
நிர்வகிப்பதற்கு கடினமானதாக இருந்தாலும் மனித வளம் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். குறிப்பாக சிங்கப்பூரை அவதானித்தால் அதன் மூல வளம் மனித வளம் ஒன்றே ஆகும். இம் மனித வளத்தை மட்டும் வைத்துக்கொண்டு பல்வேறு வகைகளிலும் அந்த நாடு சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. மனித வளத்தோடு இணைந்த தொழில் துறை வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும், பொருளாதார மேம்பாடு நாட்டினை சுபீட்சமாக்கும். ஆகவே மனித வளத்தினை முறைப்படுத்தல் அவசியமாகிறது.
சிங்கப்பூர், தாய்வான், ஜப்பான் போன்ற நாடுகளில் மனித வளத்தினை முறைப்படுத்த பல வழிகளை கடைபிடிக்கின்றனர். அவற்றில் “கைசன் (KAIZEN)” என்ற கோட்பாடு இன்று என்றும் இல்லாதவாறு உச்சரிக்கப்படுகிறது. இதன் விளக்கம் என்னவென்றால் சகல தொழிற்பாடுகளையும் செய்ய செய்ய அத் தொழிலில் ஒரு முன்னேற்றம் ஏற்படுவதாகும. (small improvement for all activities) அதாவது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை தொடர்ந்து செய்ய செய்ய அதில் தேர்ச்சி ஏற்படும். ஒரு வேலையை செய்ய/அடைய சுலபமானதுமான வழியை கடைபிடிக்க வேண்டும். ஒருசிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் சரியாகக் செய்யும் இயல்புடன் இருப்பர். அவர்களை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்பதாகும்.
மேலும் இரு வினாக்கள் கைசன் கோட்பாட்டில் இடம்பெறுகின்றன. நடக்க முடியாது என நாம் கருதும் ஒரு விடயத்தை ஏன் நடக்க முடியாது? என வினவுவர். இத்தகையதோர் தாம் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திலும் மேலதிக பெறுமதி (Added value) இருக்கின்றதா? என்று பார்ப்பர். ஒரு வேலையை எவ்வளவுதான் சிறப்பாக செய்தாலும் அடுத்த முறை இந்த வேலையை இதை விட சிறப்பாக செய்ய முடியுமென இந்த கைசன் கொள்கை வழியுறுத்துகிறது.
இவ்வாறானதொரு பெருமையுடைய விடயம் எம் பாரம்பரியத்தில் இடம்பெறவில்லை என்று கூற முடியாது. “எறும்பூரக் கற்குழியும்”, “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்”
“அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.”
“முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”
போன்றவை இவ்வகையில் தமிழ் சான்றோர்கள் அருளியவையே. இவற்றை இன்றோடு இணைத்து பயன்படுத்த மறந்து விட்டோம் என்பதுதான் உண்மை.
தொழிற்துறையின் வளர்ச்சியில் பல விடயங்கள் பங்கு கொண்டாலும் நேர முகாமைத்துவம் மிக முக்கியமானதாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு கனத்தையும் வெற்றிகரமாக/ முன்னேற்றமாக மாற்ற வேண்டும். என்பதையே ஜப்பானியர்கள் கைசன் கொள்கை மூலமும் வழியுறுத்தியுள்ளனர். நேர முகாமைத்துவம் நாளாந்த வாழ்வின் செயற்பாடுகளை மேம்படுத்துகிறது. இதற்காக ஜப்பானிய மக்கள் “ஜ விதிக் கோட்பாடு” ஒன்றை கடைபிடிக்கின்றனர். அக்கோட்பாடு பிரதான ஜந்து சொற்பதங்களின் அடிப்படையில் அமைகின்றது.
- செய்ரி – தேவையற்றவற்றை நீக்குதல்
- செய்ரோன் – ஒரு பொருளை ஒரு இடத்தில் வைத்து பாவித்தல்.
- செய்சோ – துப்பரவாக்குதல்
- செய்கெற்சு – தரப்படுத்தி வைத்தல்
- செய்சுகி – பயிற்சி
பொதுவாக இக்கோட்பாடு தொழில் புரியும் அலுவலகங்களில் கடைபிடிக்கப்படுகின்றது. தொழில் புரிவதற்கான சூழலை ஏற்படுத்தி நேரத்தை முறையாக பயன்படுத்துவதே ஜ விதிக் கோட்பாடாகும்.
வினைத்திறன் மிக்க நேர முகாமைத்துவம் தொழிலில் சிறந்த பயனைப் பெற உதவுகிறது. மேலும் நேரத்தின் மூலம் பயன்பெற குறிக்கோள்களை நிச்சயித்தல் அவசியமானதாகும். நாம் இப்போது எங்கிருக்கிறோம்? எங்கே போக வேண்டும்? என்ற கேள்விகளை வினவுதல் வேண்டும். எதிர் காலத்தில் நினைப்பதை அடைவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் வேண்டும். அவற்றை அடைய தொழிலின் பங்களிப்பை கருத வேண்டும்.
நேரத்தினை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களைத் தீட்டுதல் வேண்டும். தீட்டப்படும் திட்டங்கள் பகுதி பகுதியாக அமைய வேண்டும். அதாவது குறுகிய, இடை, நீண்ட கால திட்டங்கள் என அத்திட்டங்கள் அமைதல் வேண்டும்.
நேரமுகாமை என்பதன் பொருள் ஓய்வில்லாமல் தொழிலில் உழைப்பை ஊக்குவித்தல் என்பதல்ல. ஒரு நடவடிக்கையின் முடிவில் அது வெற்றியை ஈட்ட வேண்டும். பரபரப்பு இல்லாமல் நிம்மதியாக வாழ நாம் செய்யும் தொழிலுக்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்வதே அதன் நோக்கமாகும். ஒரு தொழில் செய்யும் போது நேரத்தில் ஏற்படும் தடைகள், முன்னேற்றத்தின் தடைகளாகும். ஒரு வேலையை ஒத்திப் போடுதல் அல்லது தாமதம் செய்தல், 100% சரியாக செய்ய வேண்டுமென்ற அங்கலாய்ப்பு, இயலாது என்று கருதினும் மறுத்து கூற முடியாமை, செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளாமை, பொறுப்புக்களை பிரித்து அளிக்காது தாமே கூட்டிக் கொள்ளுதல், மற்றும் தொடர்பாடல் குறைபாடுகள் என்பன அவ்வாறான தடைகளாகும். இவற்றை சரியாக நிர்வகிப்பதன் மூலம் தொழிலில் மேன்மையடையலாம்.
இத்தனை விடயங்கள் முக்கியம் பெறுவதற்கான காரணம் சமூகத்தில் தொழிலின் பங்கு இன்றியமையாதாய் விளங்குவதாலாகும். நல்ல வாழ்க்கை தரமான பொருளாதாரம், சிறப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்துதல், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான உருவாக்கல் என்பவை தொழில் தரும் சிறந்த நன்மைகளாகும்.