யாழ் நகர்
யாழ் நகர்
இன்று பெரும்பாலான உலக மக்கள் நகரங்களிலேயே வாழ்கின்றனர். இத்தொகை அன்றாடம் வளர்ந்து கொண்டே செல்கின்றது. நகரங்கள் வெறும் கட்டிடங்களால் ஆன இடங்கள் மட்டுமல்ல, அவை மனித உறவுகளை, பண்பாட்டை, நுட்பத்தை வெளிப்படுத்தும் வாழ்விடங்களாகும். கிராமங்களுடன் ஒப்பிடுகையில் நகரங்கள் மாறுபட்டதோர் வாழ்வியல் தோற்றத்தை ஏற்படுத்துவது மறுக்க முடியாத உண்மை. எனினும் ஒருசில நகர அமைப்புகள் சற்று விதிவிலக்காக அமைவதும் உண்மையே. யாழ் நகரும் அவ்வாறு தனியாக அடையாளப்படுத்தக்கூடியதோர் நகராகும். யாழ் நகரத்தை இன்னமும் கலாச்சாரமும், பண்பாடும் உயிர்ப்புடன் இருக்கும் நகரமாக முன்னிருத்துவது தவறன்று. யாழ் நகர மக்கள் அவற்றை அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளில் வெளிப்படுத்துவதும், வழக்கத்தை மாற்றாமல் பேணிக் காப்பதும் கண்கூடாகத் தெரிகிறது.
ஆரம்ப காலங்களில் மணிப்புரம் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் நாகர்கள் வாழ்ந்தமையால் மணிநாகபுரம் எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து சுமார் 396 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள யாழ் நகரம் ஏறத்தாள 88000 பேரை மக்கள் தொகையாகக் கொண்டது. இலங்கையில் 12 வது பெரிய நகராமாகவும் இருந்து வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வட மாகாணத்தின் தலை நகரமாக விளங்கிய யாழ்ப்பாணம் வடகிழக்கு என்ற மாகாணம் இணைந்த பின்னர் மாகாணத்தலைநகரம் என்ற அடையாளத்தை இழந்தது. பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் எல்லைக்குள் 1910 கெக்டேயர் நிலப்பரப்பு காணப்படுகிறது. மற்றும் 47 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது. யாழ்ப்பாண நகராட்சி உள்ளடங்கும் பகுதி மொத்த நிலப்பரப்பில் 79.2% ஆகும். வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமான G.D.P வீதத்தில் யாழ்ப்பாணத்தின் பங்கும் அதிகமாகும். யாழ்ப்பாணத்தில் வயது வந்தோர் கல்வி அறிவு விகிதம் 96% ஆகும். போக்குவரத்து, தொழிற்துறை, வணிக நிறுவனங்கள், பொது இடம், கலாச்சாரம் என அனைத்திலும் யாழ் நகரம் பண்பட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவு.
யாழ் நகருக்கு பெருமை சேர்க்கும், மற்றும் அடையாளமாகத் திகழும் இடங்களும், நிகழ்வுகளும் பல உள்ளன. வெறுமனே கட்டிடங்கள், சம்பவங்கள் என கடந்து போக முடியாத அடையாளங்கள் அவை. வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப்பாதையின் ஓர் அங்கமாகத் திகழும் யாழ் புகையிரத நிலையம் முக்கியமானதொன்றாகும். பிரபலமான யாழ்தேவி ரயில் சேவை இந்நிலையத்திலேயே இடம்பெறுகின்றது. யுத்த காலங்களில் பாதிப்புற்று கைவிடப்பட்ட இப்புகையிரத நிலையம் யுத்த நிறைவுக்கு பின்னர் புதுப்பொலிவுடன் நவீனமயமாக்கப்பட்டு நாள்தோறும் தடையின்றி சேவையை வழங்கி வருகின்றது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமென வர்ணிக்கப்பட்ட யாழ் பொது நூலகம் மற்றுமொரு முக்கிய அடையாளமாகும். 1933 இல் கட்டப்பட்டு நீண்ட கால அறிவு சேவையை வழங்கிய இந்நூலகம் 1981 ஆம் ஆண்டு கொடூரமான எரிப்பைத் தாங்கி பல தடைகளையும் கடந்து இன்று கம்பீரமாக காட்சியளிக்கின்றது. முன்பு போல் இன்றும் அதிகமானவர்களின் அறிவுக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. நூலகத்தின் உற்புறமும் சரி வெளிப்புறமும் சரி ரம்மியமான சூழலைக் கொண்டது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதற்கு ஏதுவான காரணிகளில் இதுவும் ஓன்றாகும்.
யாழ்ப்பாண நூலகத்திலிருந்து 5 நிமிட நடை பயணத்தில் யாழ் கோட்டையை அடையலாம். போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு பின்னர் டச்சுக்களால் இது உருவாக்கப்பட்டது. ஜங்கோண வடிவில் ஒரு நட்சத்திர உருவ அமைப்பையும் கொண்டது. 1600 ஆண்டுகளில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோட்டை இதுவாகும். மிகப் பெரிய இராணுவ அரணாகவும் விளங்கிய இது, இலங்கையை கைப்பற்ற நிகழ்ந்த வெளிநாட்டு படையெடுப்புக்களைத் தாங்கி மன்னர்களுக்கு மட்டுமன்றி இன்றைய இலங்கை இராணுவத்திற்கும் நிர்வாகக் கட்டிடமாகத்; திகழ்கிறது. இக் கோட்டை நாட்டின் மதிப்பு மிக்க மரபுரிமையாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமாகவும் இருந்து வருகிறது. இதன் உச்சியில் இருந்து காலை, அல்லது மாலை வேலைகளில் யாழ் நகரின் அழகைக் காண்பது கண்களுக்கு விருந்தாக அமையும்.
யாழ் கோட்டையில் இருந்து துரையப்பா விளையாட்டரங்கத்தை மிக அழகாக அவதானிக்கலாம். கோட்டையிலிருந்து வெறும் அரை கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. மறைந்த யாழ் மேயர் ஆல்பிரட் துறையப்பா நினைவாக இவ் அரங்கத்திற்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இவ்வரங்கு வடக்கு பிராந்தியத்திற்கான விளையாட்டுத் துறையில் முதல் பங்கு வகிக்கிறது. இன்றும் பல இளைஞர்களின் விளையாட்டு உணர்வை ஊக்கு விக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
மணிக்கூட்டுக்குக் கோபுரங்களுக்கென ஒரு கம்பீரம் உண்டு. லண்டன் பிக்பேன் கோபுரம் முதல் யாழ் மணிக்கூட்டு கோபுரம் வரை அது தொடர்கிறது. யாழ் நகரின் தனித்துவமான அடையாளமிது. 1875 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் இலங்கை வருகை புரிந்ததை நினைவு கூறும் வகையில் இது கட்டப்பட்டது. தொடர்ந்து பிரித்தானியர் செய்த நிதியுதவியினைக் கொண்டு 2002 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இன்னும் அதன் அழகு குன்றாமல் சாலையின் நடுவே அழகாக காட்சியளிக்கிறது.
யாழ் முனீஸ்வரர் வீதியில் புதிதாக தூர இடங்களுக்கான பேரூந்து நிலையம் உருவாக்கப்பட்டது. இன்று சகல வசதிகளுடன் கூடிய வகையில் நவீன மயமாக காட்சியளிக்கிறது இந்த நெடுந்தூர பேரூந்து நிலையம். நெடுந்தூர பயணம் தொடர்பில் பல அசௌகரியங்கள் பயணிகளுக்கு இருந்து வந்தது. இதன் மூலம் அக்குறை நீக்கம் பெற்றது. இது யாழ் நகரின் மற்றுமொரு அடையாளமாகக் கருதப்படுகின்றது.
1974 ஆம் ஆண்டு நிகழ்ந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்றால் உடனே ஞாபகத்திற்கு வருவது கூட்டுறவாளர் வீரசிங்க மண்டபமே. இம்மாநாட்டையடுத்து நடந்த துக்ககரமான நிகழ்வு எக்காலமும் யாழ் மக்களால் மறக்க முடியாது. காலங்கள் கடந்தும் யாழ் நகரில் இடம் பெறும் பெறும்பாலான மாநாடுகள், கலாச்சார நிகழ்வுகள் போன்றவை இன்றும் இம்மண்டபத்தில் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நகர அமைப்புகளில் பூங்காவுக்கென தனியிடம் உண்டு. யாழ் நகரும் அதற்கு விதிவிலக்கல்ல. இங்குள்ள சுப்பிரமணியம் பூங்கா, 1950 களில் அப்போதைய யாழ் நகரசபையால் உருவாக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலில் முற்றாக அழிவுற்றது. பின்னர் 2004 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் வழங்கிய நிதியினைக் கொண்டு இது திருத்தி அமைக்கப்பட்டது. இன்று நீறூற்று, அழகிய மரஞ்செடி கொடிகள், சிறுவர் விளையாட்டு அரங்கு என புத்துயிர் பெற்று மிக அழகாக காட்சியளிக்கிறது.
யாழ் நகரின் பிரதான அடையாளமாக யாழ் போதனா வைத்திய சாலையைக் கூறலாம். இது வட மாகாணத்தின் முன்னனி மருத்துவமனை மற்றும் மாகாணத்தின் ஒரே போதனா வைத்தியசாலை . சகலவிதமான மருத்துவ வசதிகளும் அனைத்து வகை நோய்களுக்குமான மருத்துவர்கள் என அளப்பரிய சேவையை செய்து வருகின்றது.
உள்ளக சந்தைகளுக்கென்று பொதுவான அடையாளம் உண்டு. யாழ் நகரின் உள்ளக சந்தைகள் வெளிநாட்டவர்களையும் அசர வைக்கும், சந்தைகளுக்கேயுரித்தான வாசனைகள், நிறங்கள், மற்றும் கூச்சல்களையும் கொண்டு விளங்குகின்றன. எந்நேரமும் பரபரப்பாக காட்சியளிக்கிறது. இங்கு அனைத்து விதமான பொருட்களையும் இலகுவாக விற்பனை மற்றும் கொள்வனவு செய்ய முடியும். மொத்த கொள்முதல் நடவடிக்கைக்கு ஏற்ற இடமாகவும், அநேகமான பொருட்களை இங்கு நியாய விலையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. யாழ் தீபகற்பத்திற்கே உரிய பண்டங்களான வேர்க்கடலை, ஒடியல், பனைமர உற்பத்தி பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கறித்தூள், இறைச்சி, கடல் உற்பத்திப் பொருட்கள், இனிப்புப் பண்டங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாக இங்கு பெற்றுக்கொள்ள முடியும். வெள்ளந்தி மனிதர்கள், தரமான பொருட்கள் என உள்ளக சந்தையும் அதன் சூழலும் வருவோரின் மனதில் நின்று நிலைக்கிறது.
மேலும் யாழ் நகர வீதிகளில் தொலைந்து போதல் இன்னொரு புதிய அனுபவமாக இருக்கும். யாழ் நகரின் வியக்கத்தக்க விரிவாக்கம் சற்று ஆச்சரியத்தை அளித்தாலும் ஆங்காங்கு பழைய கட்டிடங்கள், கோவில்கள், மண்டபங்கள் என பாரம்பரியம் நோக்கியும் அழைத்துச் செல்லும். யாழ் எல்லைக்குள் நுழையும் அனைவரையும் இன்முகம் கொண்டு புன்முறுவல் சிரிப்போடு இங்குள்ள மக்கள் வரவேற்பர். பகல் வேலைகளில் மூக்கைப் பின் தொடர்ந்தால் உங்கள் ரசனைக்கு ஏற்ற உணவை யாழ் நகர் விருந்தளிக்கும். யாழ் நகரின் உணவுகள் சிறப்பு பெறுவதற்கான காரணம் இங்கு கடைபிடிக்கப்படும் பாரம்பரிய உணவுப் பழக்கமாகும். கையில் உள்ள பணத்தின் அளவில் குறைவு இருந்தாலும் வாங்கி உண்ணும் உணவின் சுவையில் குறை கூற முடியாது. இவ்வாறு உடைகள், ஆபரணங்கள், விடுதிகள், பொழுதுபோக்குகள் என பஞ்சமின்றி பயன்களை தருகிறது யாழ் நகர். இதனால் முகம் தெரியாதவர்க்கும் யாழ்நகர் ஒரு முகவரியாகிவிடுகிறது.