PAALAM.LK

நல்லூர் திருவிழா

நல்லூர் திருவிழா

தமிழ்த் தெய்வங்களில் முருகனுக்கும் சைவ மக்களுக்கும் இடையிலான உறவு தொன்று தொட்டு வரும் நெருக்கமான உறவுமுறை. இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூரில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயமும் அதன் தனிச் சிறப்பம்சங்களும் தன்னிகரற்றவை. உலகெங்கும் வாழும் முருக பக்தர்களுக்கு நல்லூர் கந்தன் மீது உள்ள பக்தியும், உறவும் அத்தகையதே. முருகனுடைய அறுபடை வீடுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ அதே அளவிற்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் முக்கியம் வழங்கப்படுகிறது.

                                                                                     கதிர்காமக் கந்தனை ஒளி வீசும் கந்தன் என்றும், செல்வச் சந்நிதியானை அன்னதானக்கந்தன் என்றும் மரபில் மக்கள் அழைப்பதுண்டு. அதுபோல நல்லூரானை அலங்காரக் கந்தன் என்று புகழ்பாடுகின்றனர.; மேற்குறிப்பிட்ட இரு ஆலயங்களும் வடக்கிலும் தெற்கிலும் பிரசித்தி பெற்று விளங்குவதோடு  வேலாயுதத்தை முழு முதலாகக் கொண்டுள்ளமை மற்றுமொறு சிறப்பாகும். நல்லூர் கந்தனின் சிறப்பை யோகர் சுவாமி தனது பாடலில் “நல்லூர் தேரடியில் நான் கண்டு போற்றிசைத்தேன்.’’ என்றும் ‘’பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவோமா நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன் தஞ்சமடி’’ என்றும் எடுத்துக்கூறியுள்ளார். இதனால் தான் நம் முன்னோர்கள் ‘’வேலுண்டு வினை தீர்க்க’’ என்பர்.

நல்லூர் கந்த சுவாமி கோயில் திருவிழா என்றால் யாழ் நகர் உற்பட்ட அனைத்து முருக பக்தர்களின் உள்ளங்களில் உற்சாகம் வந்து சேர்ந்துவிடும். கதிர்காமக் கந்தன் கொடியேற்ற திருவிழாவைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றப்படும். திருவிழா காலங்களில் ‘’மேன்மை கொள் சைவ நீதி” என்பதற்கு பொருளாகி விடுகிறது நல்லூர்ப் பிரதேசம். அமாவாசையை தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இருபத்தைந்து நாட்களும் தினந்தோறும் விரதம் அனுட்டித்து, திருக்கோவிலுக்கு சென்று வலம் வந்து, திருவிழாவில் பங்கு கொண்டு முருகன் திருவருளைப் பெற்று வீடு திரும்பும் மக்கள் கூட்டம் எண்ணில் அடங்காதது.

                                                                                         நேரில் வந்து முருகனின் திருவருள் பெற முடியாதவர்கள் தொலைக்காட்சி, இணையத்தளம், சமூக வலைதளம் மூலம் கண்டு களிப்பர். நல்லூரில் உள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் நல்லூர் கந்த சுவாமி கோவிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவுக்கான கொடிச்சீலையை வழங்குவது மரபாகும். இது கொடியேற்ற பெருவிழாவுக்கு முதல் நாள் இடம்பெறுகிறது. ஆடி அமாவாசையிலிருந்து ஆறாவது நாள் கொடியேற்றம் நிகழ்கிறது. இதற்கு முதல் நாள் இடம்பெறும் வைரவர் உற்சவத்தை தொடர்ந்து, கொடியேற்றத்திலிருந்து அடுத்து வரும் பத்தாவது நாள் இடம்பெறும் மஞ்சள் திருவிழா மிகவும் சிறப்பான திருவிழாவாகும்.

முதல் வரும் பத்து நாட்களும் வேல், வள்ளி, தெய்வானையாக காட்சியளிக்கும் முருகன், மஞ்சள் திருவின்போது முத்துக்குமார, வள்ளி, தெய்வானையாக காட்சி தருவார். முதல் பத்து நாள் திருவிழாவிற்கும் காலையும் மாலையும் இரு வாகனங்களில் காட்சி தரும் முருகப் பெருமான் பத்து நாள் திருவிழாவிற்கு பின் காலை இரு வாகனங்களிலும், மாலை இரு வாகனங்களிலும் காட்சியளிப்பார். பதினெட்டாவது நாள் கார்த்திகை உற்சவமும், இருபதாவது நாள் கைலாச வாகன திருவிழாவும், இருபத்திரண்டாவது நாள் தண்டாயுதபாணி உற்சவமும் (மாம்பழத் திருவிழா), இருபத்தி மூன்றாம் நாள் சப்பரத் திருவிழாவும், இருபத்தி நான்காம் நாள் தேர்த் திருவிழாவும், இருபத்தைந்தாம் நாள் தீர்த்தோற்சவமும் அதன் பின்னர் பூங்காவனத் திருவிழாவும் இங்கு விமர்சையாக நடைபெறும். தொடர்ந்து வைரவர் உற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும். தேர்த்திருவிழாவின் போது இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் ஒன்று கூடுவதால் ஏற்படும் சன நெருக்கடியை தவிர்க்க பெருபாலானவர்கள் விடியற் காலை மூன்று மணியளவிலேயே வருகை தருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

                              மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியெடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம், அடியளித்தல், அலகு குத்துதல் என நிவர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இவற்றில் அடியளித்தல் மற்றும் அங்கப்பிரதட்சணம் வேறு எந்த ஆலயங்களிலும் இடம்பெறாத அளவிற்கு தனித்துவமானவையாகும். மேலும் பத்து நாள் திருவிழா நிறைவுற்ற பின்னரும் புராண படலம் செய்தல், சமய பிரசங்கம் செய்தல், திருப்புகழ், திருமுறைகள் ஓதல், பஜனை, தனிமணி ஓசை ,மிருதங்கம், தவில் இசைத்தல் என பல நிகழ்வுகள் இடம்பெறுகின்ற சிறப்பு வாய்ந்த ஆலயமும் இதுவாகும். இவை மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடாத்தப்படுகிறன.

தேர்த்திருவிழா தினத்தன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கூடி நிற்க, பக்தர்களின் ‘’அரோகரா…’’  எனும் கோசம் வானைப் பிளக்க, நாதஸ்வர வித்துவான்களின் மங்கள இசை முழங்க, வசந்த மண்டப திரைகள் விலக சுப்பிர மணிய ஆறுமுக சுவாமி கஜவல்லி மகாவல்லி சமேதராக வசந்த மண்டபத்தில் திருக்காட்சி கொடுத்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இவ்வகையில் உள்வீதி வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.  யாக சாலையில் பூசைகள் நிறைவு பெற்றதும் சண்முகப் பெருமாள் வெளிவீதியை வந்தடைவார். சித்திர ரதத்தில் கம்பீரமாக ஆரோகணித்த நிலையில் சண்முகப் பெருமானுக்கு தீபம் காட்டப்பட்டு ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்ட தேங்காய்கள் பக்தர்களார் உடைக்கப்படும். அதனைத்தொடர்ந்து ‘’அரோகரா…’’ ஓசையுடன் தேரின் வடக்கயிற்றை பற்றிக்கொண்டு இழுக்கத்தொடங்குவர்.

                        மேள தாளங்களை இசைத்து சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் வெளி வீதியில் வலம் வந்து தேர் இருப்பிடத்தை சென்றடையும். தேர் வீதி வலம் வரும் போது நான்கு வீதிகளிலும் நிறைகுடம் கும்பங்கள் வைத்து பூசைகளும் அர்ச்சணைகளும் இடம் பெறும். தேரைப் பின் தொடர்ந்து அடியார்கள் அங்கப்பிரதட்சணம், பாற்செம்பு, காவடிகள், தீச்சட்டி எடுத்தல், மற்றும் பஜனைகள் போன்றவற்றில் ஈடுபடுவர். தேர் இருப்பிடத்தை அடைந்த சிறிது நேரத்தில் முருகப் பெருமானுக்கு ‘’பச்சை சாத்தும் விழா ‘’ நடைபெறும். பச்சைநிற வஸ்திரத்தினால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சணைகள் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். அதனையடுத்து தேரை நிறுத்தி வைக்கும் இடத்தில் இருந்து எழுந்தருளிய முருகப் பெருமான் கோபுர வாசலின் முன் நின்ற சப்பர ரதத்திற்கு முன்னால் ஆடி அசைந்து வந்து ஆலயத்தினுள் நுழைவார். பின்னர் உள் வீதியில் வசந்த மண்டபத்திற்கு முன்னுள்ள தெற்கு வாசல் வரை சென்று வசந்த மண்டபத்தை வந்தடைவார். வசந்ந மண்டபத்தை வந்தடைந்த முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் இனிதே நிறைவு பெற்றதும் தேர்த்திருவிழா நிறைவுக்கு வரும். 

கோவிலின் சுற்று வட்டத்தில் மக்கள் அலை அவ்வளவு எளிதில் ஓயாது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் கோவிலைச் சுற்றி காணப்படும் கடைகள், சிற்றுண்டிச் சாலைகள், களியாட்டங்கள் என கொண்டாட்டங்களில் மூழ்கிப் போவார்கள். குறிப்பாக யாழ் மாவட்டத்திற்கு வெளியில் இருந்து திருவிழாவிற்காக வந்தவர்கள் இதனை அதிகமாகக் கொண்டாடுவர். நள்ளிரவு வரை நீளும் கொண்டாட்டங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வரும்.

                               அடுத்த நாள் காலை ஆறு மணியளவில் ஆரம்பமாகும் விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகர், வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார். தீர்த்தக்கேணியின் எட்டு திசையிலும் அஷ்ட திக்பாலகர் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படும். மத்தியில் முருக வேலனின் அஸ்திர ராஜருக்கும் ஆராதனைகள் நிகழும். 

                                                  மாலை ஆரம்பமாகும் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம்; இடம் பெற்று முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி உலா வருவார். அடுத்தடுத்த நாட்களில் பூங்காவனம் மற்றும் வைரவர் உற்சவத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவம் நிறைவுக்கு வரும்.கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை நடைபெறும் திருவிழாவை ஆன்மீகம் சார்ந்து நோக்குவது மட்டுமன்றி சமூக பொருளாதார அம்சங்கள் பொருந்தியதாக கருத்தில் கொள்வதே நியாயமானது. சாதி பேதமின்றி ஊர் கூடி தேர் இழுப்பதில் ஒற்றுமை என்ற சமூக தத்துவக் கொள்கை வெளிப்படுகிறது. திருவிழாவை ஆதாரமாகக் கொண்டு பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுவதால் பொருளாதார மேம்பாடும் உண்டாகிறது. இதனால் தான் நல்லூர் திருவிழாவிற்கு அமோக வரவேற்பும் நன்மதிப்பும் உண்டாகிறது என்றால் அது மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *