நவராத்திரி
நவராத்திரி
இந்து மதத்தில் பெண் தெய்வ வழிபாட்டுக்கென தனி வரலாறும் மகத்துவமும் உண்டு. மனித நாகரிகம் தோன்றும் முன்னமே பெண் தெய்வ வழிபாடு மானிட இனத்திடையே வேரூன்றிய அம்சமாக இருந்து வந்துள்ளது. நாகரிகம் வளர்ந்து நூற்றாண்டுகள் கடந்தும் பெண் தெய்வ வழிபாடு நம்மிடையே சற்றும் குறையவில்லை என்பது மகத்தான உண்மை. பிற ஆண் தெய்வங்களை விடவும் பெண் தெய்வங்களுக்கு வழிபாட்டுத் தலங்களும், வழிபாட்டு முறைகளும் அதிகமாகும் “சக்தியின்றி சிவனில்லை” என்று தொன்று தொட்டு சொல்லப்படும் கூற்று பெண் தெய்வ ஆளுமையையும், முக்கியத்துவத்தையும் பறை சாற்றுகிறது.
நமது இந்து மத ஆன்மீகப் பயணத்தில் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று பெண் தெய்வ கோட்பாடுகளை தினந்தோறும் கடந்து செல்கிறோம். அதாவது வீரம், செல்வம், கல்வி இவை மூன்றும் அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத அம்சங்களாகும். இவ்வுலகில் மனித வாழ்வின் நோக்கத்தை உணர இவை அவசியமாகின்றன. அவ்வகையில் நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரித்தானது. எல்லா வயதுடைய பருவத்தைச் சார்ந்த பெண்கள் இவ்வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டைப் பொருத்த மட்டில் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன், கன்னிப் பெண்கள் பெறுவது திருமணப் பயன், சுமங்கலிகள் பெறுவது மாங்கல்ய பயன், மூத்த சுமங்கலிகள் பெறுவது மன மகிழ்ச்சி மற்றும் மன நிறைவு, எல்லோரும் பெறுவது பரி பூரண திருப்தி.
ஒரு ஆண்டில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்பவையே அவை. உலகில் உள்ள பெருமளவு இந்துக்களால் கடைபிடிக்கப்படுவது சாரதா நவராத்திரி. இது புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். புரட்டாசி மாதத்தில் நவக் கிரகங்களின் நாயகனாக உள்ள சூரியன், கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயன காலமாகும். கன்னி இராசிக்கு அதிபதியானவன் புதன். கல்வி, புத்தி, தொழில், ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது. இக்காலத்தில் நவராத்திரி விரதம் அனுட்டிப்பதும் வழிபாடுகள் மேற்கொள்வதும் சாலச் சிறந்தது என்பர்.
ஒன்பது இரவுகள் என பொருள்படும் நவராத்திரி துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடப்படுவதாகும். இம்மூவரையும் வழிபடக்காரணம், அனைத்து எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை குணங்களை வளர்க்கும் பண்புகளும் நற்குணங்களும் இம்மூன்று தேவிகள் மூலம் இவ்வுலகில் நிலைத்து நிற்கவே இதனைக் கொண்டாடுகின்றோம்.
புராணக் கதைகளில் துர்க்கா தேவி போர் நடாத்துவதும் அரக்கர்களை அழிப்பதும் அடையாளமாக சித்தரிக்கப் படுகிறது. நம்வாழ்வில் வீரம், தைரியம் முக்கியம் என்பதை அது காட்டுகின்றது. செல்வம் அன்றாட வாழ்வில் முக்கியமானது. அதனை லட்சுமி வழிபாட்டில் உறுதி செய்ய முடிகிறது. கல்வி மற்றும் அறிவினை பெற்றுக் கொள்ள சரஸ்வதியை வழிபடுகிறோம். பத்தாவது நாள் விஜயதசமி திருவிழா கொண்டாடப்படுகிறது. இது வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆகவே வழிபாட்டின் ஒவ்வொரு கட்டத்தின் மூலமும் அதன் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. முதலாவதாக எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டாவது நல்லொழுக்கங்களை வேரூன்ற வேண்டும் தேவையான மனத்தூய்மையை பெற்ற பிறகு இறுதியாக ஆன்மீக அறிவைப் பெற வேண்டும். இதற்காகவே மும்மூன்று நாட்களாக பிரித்து முத்தேவிகளையும் வணங்குகிறோம்.
ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை நடைபெறும். ஆயுத பூஜையின் போது தம் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தும் கருவிகளையும், பொருட்களையும் வழிபடுவது வழக்கம். இது ஒருவரின் கடமைகளை நிறைவேற்ற உதவியதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் நடைமுறை. பத்தாம் நாள் விஜயதசமி அது சரஸ்வதியின் ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் வித்யாரம்பம் செய்வர். வித்யாரம்பம் என்பது அறிவாற்றலைப் பெறுவதற்கு தொடங்கும் நாளாகும். மற்றும் சிறு குழந்தைகள் கல்வி கற்க இந்நாளில் தான் ஆரம்பிப்பார்கள். நாம் எப்போதும் ஒரு தொடக்க மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். என்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
இத்தனை தெய்வீக அம்சங்கள் பொருந்திய நவராத்திரி கொண்டாடப்பட புராணக் கதைகள் சில உண்டு. இவை நம்மிடையே பரவலாக நம்பப்படுகிறது. அவ்விரதம் கடைபிடிக்கவும் கொண்டாடவும் காரணமான கதைகள் பல உண்டு. முன்பொரு காலத்தில் வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவரொருவர் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியதாகவும் தனக்கு யாரும் நிகரில்லை என்கின்ற தலைக்கணம் கொண்டதாகவும் காணப்பட்டார். இதனால் அகத்தியர் போன்ற பெரு முனிவர்களை அவமரியாதை செய்தார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் “மகிவுமாக (எருமை) போவாய” என சாபமிட்டனர். அதே நேரத்தில் ரம்பன் என்ற அசுரன் கடும் தவம் செய்து அக்கினி பகவானிடம் சகல வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என கேட்க நீ ஆசைப்படும் பெண் மூலம் மகன் பிறப்பான் என அருளினார். ரம்பன் வரம் பெற்று முதலில் கண்டது ஒரு காட்டெருமையை இவனும் காட்டெருமையாக மாறினான். முனிவர்களால் எருமையாக பிறப்பாய் என சாபம் வாங்கிய வரமுனி இவர்களுக்கு வாரிசாக மகிசாசுரனாக பிறந்தான்.
மகிசாசுரன் 10000 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து பிரம்மனிடம் கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் மரணம் சம்பவிக்கக் கூடாதென வரம் பெற்றான். கன்னிப்பெண் என்றால் வலிமையற்றவளாக இருப்பாள் என்று எண்ணியே அவ்வாறு வரம் பெற்றான். வரம் பெற்ற மகிசாசுரன் தேவர்களையும் மக்களையும் கொடுமை செய்ய மகாவிஷ்னுவை அழைத்து விமோசனம் கேட்டனர். பராசக்தியால் மட்டுமே அசுரனை அழிக்க முடியும் என்பதை உணர்ந்து மும்மூர்த்திகளும், தேவர்களும் பிராத்தனை செய்து ஸாத்வ, ராஜஸ், தாமஸ் என்ற மூன்று குணங்களை ஒன்றாகப் பெற்ற பேராற்றலாக மாறினாள் அம்பாள். தேவர்கள் படைக்கலங்கள் கொடுக்க சிவன் திரிசூலத்தைக் கொடுக்க அக்கினி பகவன் சக்தியைக் கொடுக்க வாயு பகவான் வில்லும் அம்பும் கொடுக்க தேவி மகிசாசுரனை வதம் செய்ய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.
அம்பாளுடன் கடும் போர் புரிந்த மகிஷாசுரன் முடிவில் அம்பாளால் வதம் செய்யப்பட்டான். அவனை வதம் செய்தது அஷ்டமி தினத்தன்று, தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. இந்நாட்களே நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது.
இதே போன்று இன்னுமொரு கதையும் உண்டு. அதாவது சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் மக்களுக்கு அக்கிரமங்கள் செய்தனர். தேவர்களையும் விட்டு வைக்கவில்லை. எனவே மக்கள் மும்மூர்த்திகளை தஞ்சம் அடைந்து காத்தருளுமாறு வேண்டினர். மும்மூர்த்திகளும் மகா சக்தியைத் தோற்றுவித்து தத்தமது ஆயுதங்களையும் வாகனங்களையும் வழங்கினர். இதன்போது மும்மூர்த்திகளும் தங்களது சக்திகளை வழங்கி சிலையானார்கள்.
அவ்வாறு அவர்கள் நின்றதால்தான் பொம்மை கொலு வைக்கும் வழக்கம் வந்தது. தேவி அழகிய பெண்ணுருவம் கொண்டு பூமிக்கு வந்து “யார் என்னைப் போரில் வெல்கிறார்களோ, அவர்களை மணப்பேன்” சொன்னாள். சும்பனும், நிசும்பனும் அசுரப் படைகளை அனுப்ப, எல்லோரையும் அழித்தாள் தேவி. அதில் ரக்தபிஜன் எனும் அரக்கன் உடம்பிலிருந்து விழும் இரத்தம் மூலம் மீண்டும் இன்னொரு ரக்தபிஜனாக தோன்றுவான் இவ்வாறு இரத்தம் சொட்ட ரக்தபிஜன்கள் பல்கிப் பெருகினர். உடனே தேவி சாமுண்டியை தோற்றுவித்து விழும் ஒவ்வொரு இரத்தத் துளியையும் குடிக்க ஆணையிட்டாள். இருதியில் அவனும் சோர்ந்து இறந்து போனான். அடுத்த கனமே சும்பன், நிசும்பனை அழித்து விடுகிறாள் தேவி.
அந்நாட்களில் போருக்கென்று ஒரு சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்த்தமனம் ஆன பிறகு போர் புரிவதில்லை அம்மாலை வேளைகளில் அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்க அன்னையைக் குறித்த ஆடல், பாடல், நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவ்வாறே ஒன்பது இரவுகளும் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியை இரவில் கொண்டாடுகிறோம். இறுதி நாள் அதாவது பத்தாம் நாள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் தேவி மலை மகளாக இருந்து கிரியா சக்தியை, அதாவது வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து நம்மை முழு மனிதனாக்குகிறாள். இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி நமக்கு ஞான சக்தியை, அதாவது அறிவை வழங்கி நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
நவராத்திரி பூஜை செய்வதற்கென ஆகம நூல்களில் திட்டவட்டமான பூஜை நெறிமுறைகள் உண்டு. புரட்டாசி மாச வளர்பிறை பிரதமத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்தல் வேண்டும். வீடுகளிலும் அலுவலகங்களிலும் கொலு வைத்தல் வேண்டும் விரதம் கைக்கொள்வோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு, பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்கள் பகல் உணவின்றி இரவு பூஜை முடித்த பின் பால், பழம், அல்லது பலகாரம் உண்பது நல்லது. ஒன்பதாம் நாள் உபவாசம் இருந்து மறுநாள் விஜயதசமி அன்று காலை ஒன்பது மணிக்கு முன்னர் பாரனை செய்தல் வேண்டும். விஜயதசமி அன்று காலையில் சுவையான உணவுப் பதார்த்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து குடும்ப அங்கத்தவர்களுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்து பாரனை பூர்த்தி செய்யலாம். இறுதியான நாள் விஜயதசமியன்று கோயில்களில் வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டும் வழமை உண்டு. கன்னி வாழை வெட்டு என்பர்.
வீட்டில் பூஜை செய்பவர்கள் பூஜை முடித்த பின்னர் தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம். அல்லது ஒன்பது நாட்களில் ஏதாவது ஒருநாள் விருந்துபசாரம் செய்யலாம். இயலாதோர் சுமங்கலிக்கு ஒருநாள் கண்டிப்பாக விருந்துபசாரம் செய்வது அவசியம். கன்னிப் பெண்களுக்கு உணவளித்து தாம்பூலம் கொடுத்தல் சிறப்பானது. ஒன்பது நாட்களும் பூஜை செய்து தம்மால் முடிந்ததை நிவேதனம் செய்த உபசரிப்பதனால் பூஜையின் முழுப்பலனையும் அனுபவிக்க முடியும்.
நவம் என்றால் ஒன்பது மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாட்களும் பூஜை செய்து தேவியரை வழிபட்டால் நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனதின் எண்ணங்களும் செம்மையாகும். நவ கிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோசங்களும் நீங்கும். நவராத்திரியை அனைவரும் பக்தி சிரத்தையுடன் வழிபட்டு மேன்மையடைய வேண்டும்.