யாழ்ப்பாண கோட்டை
யாழ்ப்பாண கோட்டை
யாழ் தீபகற்பம் இலங்கையின் வரலாற்று அடையாளமாக திகழ்கிறது. யாழ்ப்பாணம் ஏராளமான தொல்பொருட் சின்னங்களையும், எச்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஊராகும். வெளிநாட்டவர்கள், பயண விரும்பிகள் எனப் பலர் வடக்கு நோக்கி பயணப்படுவதற்கு காரணம் இவற்றை கண்டு ரசிப்பதற்காகவும் அதன் தொன்மையை அறிந்து கொள்ளவும் தான். அவ்வாறு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி இருந்த போர்த்துக்கேயர்கள்/ ஒல்லாந்தர்களின் கைவண்ணத்தில் ஆன பிரம்மாண்டமான கோட்டைதான் யாழ்ப்பாண கோட்டையாகும்.
பல வரலாற்றுக் காலங்களை கடந்து வந்த போதிலும் இக் கோட்டை இன்றளவும் கம்பீரமாக இருப்பது அதன் கட்டுமான தரத்தினை படம் பிடித்துக்காட்டுகின்றது. EAGLE EYE எனப்படும் ஆகாய வழியாக இக்கோட்டையைப் பார்க்கும் போது ஜங்கோணி வடிவில் (சற்று நட்சத்திர ஆமை வடிவில்) பரந்து விரிந்து தோன்றக் காணலாம். இலங்கைத் தீவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்த போர்த்துக்கேயர், அதன் பெரிய இராசதானி நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது சவாலாக இருந்த போதிலும் அதிக கவனம் எடுத்துக் கொண்டமைக்கான காரணம் அதன் புவியியல் அம்சங்களும் வளங்களுமேயாகும். மேலும் தங்களது வர்த்தக தேவைகளுக்கு ஏற்ற வகையில் இருந்த போக்குவரத்து மார்க்கங்களும் பெறுமதியான வளங்களும் அவர்களை ஈர்த்தது எனலாம்.
இக் கோட்டையின் தோற்றக் காலத்தை சோழர் காலத்துடன் இணைக்கக் கூடியதாகவுள்ளது. இக் கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த அடையாளச் சின்னங்கள் அதற்கு சான்று பகர்கின்றன. 16 ஆம் நூற்றாண்டுகளில் அதாவது 1621 ஆம் ஆண்டு போர்த்துக்கேய படையெடுப்பின் போது யாழ்ப்பாணத்தை ஆண்ட “சங்கிலி செகராச சேகரனை” தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் தங்கள் படை பலத்தை மீண்டும் நிரூபித்தனர். அதனை தலைமை தாங்கிய “பிலிப் தி ஒலிவேரோ” ஏற்கனவே பல தேசங்கள் சென்று தமது திறமையை உலகறியச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொள்ள பல வகையான மாற்றங்களை அடக்கு முறைகளை மேற்கொண்டு வந்த போர்த்துக்கேயர் தங்கள் பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ள கடலோரப் பிரதேசமான குருநகரை தெரிவு செய்து பாதுகாப்பு அரணாக இக் கோட்டையை அமைக்கத் தீர்மானித்தனர்.
1925 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர். நீண்ட காலமாக கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போதிலும் முற்றாக கட்டி முடிக்க முடியவில்லை. சதுர வடிவிலான நான்கு மூலைகளிலும் நான்கு காவலரண்கள், கத்தோலிக்க தேவாலயம் கேப்டன் மேதரின் வீடு, மற்றும் ஒருசில முக்கிய அறைகள் இருந்தன. இத் தேவாலயத்தில் இருந்த கன்னி மேரியின் சிலை பல அற்புதங்களை நிகழ்த்தியதாக கருதிய போர்த்துக்கேயர் “யாழ்ப்பாணத்தின் எங்கள் அதிசய மேரியின் கோட்டை” என அழைத்ததாக சான்றுகள் உண்டு.
நீண்ட காலம் போர்த்துக்கேயர் யாழ்ப்பாண குடா நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை. காரணம் 1958 ஆம் ஆண்டு ஒல்லாந்த படையெடுப்பு மிகக் குறுகிய படைகளை வைத்து “ரிச்சோவ் வான் கொனெஸ்” எனும் தளபதி தலைமை தாங்கி யாழ் குடா நாட்டைக் கைப்பற்றினான். அவர்களும் தங்கள் விருப்பத்திற்கு அமைய பல மாற்றங்களை யாழ் நகரில் கொண்டு வந்தனர். இக்கோட்டையை சிறிது காலம் பயன்படுத்திய ஒல்லாந்தர் பின்னர் அதனை இடித்து விட்டு பல கட்டுமான உத்திகளைப் பயன்படுத்தி மேலும் வலிமையாக இக்கோட்டையை அதே இடத்தில் கட்டியெழுப்பினர். 18 நூற்றாண்டுகளிலேயே வெளிச்சுற்று அரண்கள் கட்டப்பட்டது. நட்சத்திர வடிவிலான அமைப்பு பெரிதும் பேசப்பட்டது.
இதுவே உலகின் முதல் நட்சத்திர வடிவிலான கோட்டை என அழைக்கப்படுகிறது. 62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக் கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் 40 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் பிற படையெடுப்புக்கள் வரக்கூடும் என கணித்த ஒல்லாந்தர் பாதுகாப்பு நோக்கில் வெளிப்புறம் ஆழமான அகழிகளையும் நான்கு பக்கமும் பாரிய பீரங்கிகளையும் பாதுகாப்பு தளங்களையும் கற்கோபுரங்களையும் கொண்டதாக வடிவமைத்தனர்.படைவீரர்களுக்கான இருப்பிடங்கள், கத்தோலிக்க தேவாலயம். ஆளுனர் மாளிகை, ராணி அறை, சிறைச்சாலை பொலிஸ் மைதானம், பேருந்துகள் மற்றும் பிற நிர்வாக மையங்கள் என இக் கோட்டையின் உட்புறம் பல வசதிகளை செய்து கொண்டனர். சுமார் 137 ஆண்டுகள் ஒல்லாந்தர் வசம் இருந்த யாழ்ப்பாணம் அவர்களின் நிர்வாக மையமாக இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதன் பின்னர் ஆங்கிலேயர் படையெடுப்பின் மூலம் யாழ் நகர் அவர்கள் வசமானது. 1796ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டான சுதந்திர ஆண்டு வரை ஆங்கிலேய ஆட்சி நீடித்தது. அவர்களும் பல வகையான மாற்றங்கள் கொண்டு வந்தாலும் இக் கோட்டைக்கு எவ்வித பாதிப்பும் வரவில்லை.அதன் பின்னர் உள்நாட்டு யுத்தங்கள் காரணமாக இரு தரப்பினரிடமும் சிக்குண்ட இக்கோட்டை கடுமையான பாதிப்பைத் தாங்கிக் கொண்டது. 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது இக் கோட்டையும் கைப்பற்றப்பட்டது. தாக்குதல் மூலம் கடலோரப் பகுதியில் ஒரு பகுதி அழிக்கப்பட்டிருந்தாலும் வெளிப்புற அகழியும் அகழிக்கு வெளியே உள்ள கோபுரமும் பெரிதளவில் பாதிப்படையாமல் உள்ளது. அதில் இரட்டை சுரங்களில் தலா ஜந்து சுரங்கங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் கதவுகள் அற்ற திறந்த நுழைவாக உள்ளது.
குயின்ஸ் பேலஸ் எனப் பெயரிடப்பட்ட நினைவுச்சின்னம் அடையாளம் காணக்கூடியதாகவுள்ளது. மேலும் டச்சுக் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்ட குறுகிய சுவர்கள் அழிவிலிருந்து தப்பித்து கொண்டுள்ளன. தூக்கு மேடை கோபுரம் சிதைவுற்றிருந்தாலும் இன்றும் நிலையாக நிற்கின்றது. மற்ற அனைத்து இடங்களும் பாரிய அளவில் சேதத்துக்குள்ளாகி எச்சங்கள் மட்டுமே மீதமாய் உள்ளன.2009 ஆம் ஆண்டு போரின் முடிவில் தொல்லியல் திணைக்களமும் இலங்கை அரசும் இணைந்து நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் நிர்மானப் பணிகளை மேற்கொண்டனர். தொல்லியல் ஆய்வின்படி அழிவுக்குட்பட்ட சோழர் காலத்து கோயில் கற்கள், கல்வெட்டுக்கள், ரோமானிய நாணயங்கள், மட்பாண்டங்கள் போன்ற சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போதும் ஒரு சில கட்டுமானப் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எந்நேரமும் சன நடமாட்டம் அதிகமாக இக் கோட்டையில் இருப்பதை அவதானிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது உள்நாட்டவர்களும் வரலாற்று சிறப்புமிக்க இக் கோட்டையைக் காண ஆவல் காட்டுவது சிறப்பான விடயமாகும். இக்கோட்டையின் மேலிருந்து பார்க்கும் போது யாழ் நூலகம், துரையப்பா மைதானம், கடற்கரை என யாழ் நகரின் பெரிய கட்டடங்கள் என அனைத்தையும் காணக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மாலை நேரத்தில் மாலை நேரத்தில் அக் கோட்டையின் மேல் விழும் ஒளிக் கற்றைகளும் ஓயாது அடிக்கும் காற்றும் வானின் வர்ணக்கோலங்களும் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கும்.